Sunday 18 January 2015

ஒபாமாவின் டெல்லி வருகையையொட்டி குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதையில் 7 அடுக்கு பாதுகாப்பு வரலாறு காணாத ஏற்பாடுகள்

புதுடெல்லி, 
டெல்லியில் ஒபாமா வருகையையொட்டி குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. அத்துடன் வரலாறு காணாத ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஒபாமா வருகை
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தலைநகர் டெல்லியில் 26–ந் தேதி நடைபெறுகிற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் மனைவி மிச்செல், உயர் மட்ட தூதுக்குழுவினருடன் 25–ந் தேதி தனி விமானம் மூலம் டெல்லி வந்து சேருகிறார்.
ஒபாமாவின் வருகையையொட்டி டெல்லியில் குடியரசு தின விழாவுக்கு வரலாறு கண்டிராத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7 அடுக்கு பாதுகாப்பு
இது குறித்த சிறப்பு தகவல்கள் வருமாறு:–
* ஒபாமா, மனைவி மிச்செல்லுடன் டெல்லி ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் தங்குகிறார். இந்த ஓட்டல் தற்போது ஒபாமா பாதுகாப்பு பணியை கவனிக்கிற அமெரிக்காவின் ரகசிய சேவை அதிகாரிகள் பாதுகாப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
* டெல்லியில் பொருத்தப்பட்டுள்ள 15 ஆயிரம் ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிற காட்சிகளை கண்காணிக்கும் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
* டெல்லியில் குறிப்பாக குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிற ராஜபாதை பகுதியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 80 ஆயிரம் டெல்லி போலீசாருடன், 20 ஆயிரம் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்துடன் அண்டை மாநிலங்களான அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் ஆயுதப்படையினர், மத்திய ஆயுதப்படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
* ராஜபாதையில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான எதிர்ப்பு பீரங்கி
* ராஜபாதையில், வான் வழியாக எந்தவொரு விரும்பத்தகாத தாக்குதல் முயற்சிகளையும் முறியடிக்கும் விதத்தில் முக்கிய இடங்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுவப்படுகின்றன.
* மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகள், ராஜபாதையையொட்டிய அலுவலகங்கள், விழா நடைபெறுவதற்கு 72 மணி நேரம் முன்னதாக பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்படும்.
* பாதுகாப்பு காரணங்களையொட்டி குடியரசு தினத்தின்போது ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி நடத்துகிற விருந்து நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிற விருந்தினர்கள் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப்படும்.
குண்டு துளைக்காத பாதுகாப்பு
* குடியரசு தின பேரணி தொடர்பான அனைத்து ஒத்திகை நிகழ்ச்சியிலும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் அங்கம் வகிப்பார்கள்.
* குடியரசு தின விழா நிகழ்ச்சிகள், திறந்த வெளியில் நடப்பதால், ஒபாமாவின் பாதுகாப்புக்கு இந்திய, அமெரிக்க பாதுகாப்பு முகமைகள் கூடுதல் முக்கியத்துவம் அளித்து, கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.
* குடியரசு தின விழாவில் மிக முக்கிய பிரமுகர்கள் அமருகிற பகுதியில் குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசம் அமைக்க வாய்ப்பு உள்ளது.
தனியாக வருவார் ஒபாமா
* இதுவரை இல்லாத வகையில், ராஜபாதைக்கு செல்லுகிற பாதைகள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. மேலும் அந்த பகுதியில் அமைந்துள்ள ரபி மார்க், ஜன்பத், மான்சிங் ரோடு ஆகியவை விழாவுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்பாகவே மூடப்பட்டு விடும்.
* பொதுவாக குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள தலைமை விருந்தினர், ஜனாதிபதியுடன் அவரது குண்டு துளைக்காத காரில் வருவது வழக்கம். ஆனால் ஒபாமா, தனியாக தனது காரில் வந்து சேருவார் என தகவல்கள் கூறுகின்றன.
ஒபாமா வருகையின்போது, 3 நாட்களும் டெல்லி உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive