Monday 19 January 2015

அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு கூடுதல் நிதி: மானியங்கள் குறைக்கப்படும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேச்சு

அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், மானியங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

சென்னை, 

2015-2016-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், வருகிற பிப்ரவரி மாத இறுதியில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மானியம்

நிதி மந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார். இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான செலவு நிதி கமிஷன் தனது இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து இருப்பதாகவும், அதில் அரசின் செலவினங்களையும், மானியங்களையும் குறைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எண்ணெய் மற்றும் ரசாயன உரங்களுக்காக மட்டும் லட்சக்கணக் கான கோடி ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.

நிதி மந்திரி அருண் ஜெட்லி

இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) நிகழ்ச்சியில் நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது மானியங்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. சமையல் கியாசுக்கான மானியம் கடந்த 1-ந் தேதி முதல் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடி யாக வழங்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களில் வழங்கப்படும் மானியங்களை முறைப்படுத்தி படிப்படியாக குறைக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

வரி சீர்திருத்தங்கள்

முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு வரி விதிப்பு மற்றும் பிற கொள்கைகளில் நிலைத்தன்மை இருப்பது அவசியம் ஆகும். எனவே வரி விதிப்பு முறைகளை மாற்றியமைப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் வெளிப்படைத்தன்மை மிகமிக அவசியம்.

முக்கிய துறைகளில் அதிக அளவிலான அன்னிய முதலீட்டை ஈர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே முதலீட்டாளர்களுக்கு சாதகமான வரிசீர்திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் மாநில அரசுகளிடையே போட்டி இருக்க வேண்டும்.

நிலையான அரசியல்

கடந்த ஆட்சியின்போது 10 ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை இருந்தது. பொருள் வினியோகத்தில்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டதே தவிர உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தப்படவில்லை. முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் விதத்தில்தான் வரி விதிக்கப்பட்டது.

மேலும், பல விஷயங்களில் முடிவு எடுப்பதில் காலதாமதம் நிலவியது. இதனால் தொழில்களில் அதிக வளர்ச்சி எட்டப்படவில்லை. கடந்த காலங்களில் இருந்த அரசியல் சூழ்நிலை அப்படி. ஆனால் அந்த சூழ்நிலை இப்போது இல்லை. தற்போது நிலையான அரசியல் சூழ்நிலையில் முடிவுகள் உடனே எடுக்கப்படுகின்றன. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கிறோம்.

வீழ்ச்சியில் இருந்த இந்திய பொருளாதார நிலமையையும், அதன் நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். வர்த்தகம் குறித்த முடிவுகள் சரியான காலத்தில் எடுக்கப்பட்டாக வேண்டும்.

அவசர சட்டம் ஏன்?

மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அவையில் (மக்களவை) நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட டெல்லி மேல்-சபையில் நிறைவேறாமல், தேர்வு குழுவுக்கு அனுப்பப்படுகிறது. இதில் எம்.பி.க்களின் எண்ணிக்கை பிரச்சினை உள்ளது.

மக்களவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவுக்கு தடை ஏற்படுத்தினால், அந்த அவையின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்குவதாகத்தான் அமையும். ஒரு அவை செயல்படாமல் இருப்பதால் நாடே அதன் முடிவுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவேதான் அரசியல் சாசனம் காட்டியுள்ள வழியின்படி (அவசர சட்டங்கள் பிறப்பிப்பது) உரிமைகளை நிலைநாட்ட வேண்டி உள்ளது.

பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல் விலை தற்போது குறையத்தொடங்கி உள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவற்றின் விலை முடிவு செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு நல்ல இழப்பீடு கிடைப்பதற்கு வசதியாக, நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய அரசு உத்தேசித்து இருக்கிறது.

மத்திய அரசின் புதிய அமைப்பான ‘நிதி ஆயோக்’ மூலம், மாநில அரசுகளுக்கு ஒவ்வொரு திட்டத்திலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் மாநில அரசுகள் முக்கிய பங்கு வகிக்க முடியும். அத்துடன் மாநிலங் கள் தங்களுக்கான திட்டங் களை தாங்களே வடிவமைத்துக்கொள்ள முடியும்.

அடிப்படைகட்டுமான வசதி

சரக்கு மற்றும் சேவை வரியை பல்வேறு மாநிலங்கள் வரவேற்று உள்ளன. இதை அமல்படுத்துவதால் மாநிலங் களுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது. பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் வகையில் அந்த துறையில் முதலீடு அதிகரிக்கப்படும்.

சமீப காலமாக உணவுப்பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

தொழில் அதிபர்கள்

பின்னர் சிமெண்டு தொழிற்சாலையைச் சேர்ந்த சீனிவாசன் உள்பட பல தொழில் அதிபர்கள் தங்களுக்கு தொழில் நடத்துவதில் உள்ள சிக்கல், குறைபாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

எலெக்ட்ரானிக் உபகரணங் கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நிறுவனத்தின் டெண்டரை முடிவு செய்வதில் பாதுகாப்புத்துறை செய்த காலதாமதத்தால், ஏறக்குறைய கம்பெனியை மூடும் நிலை உருவாகிவிட்டதாக தெரிவித்தார்.

அந்த கேள்விகளுக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி பதில் அளித்து கூறியதாவது:-

சட்டத்தில் திருத்தங்கள்

கம்பெனிகள் சட்டம் குறித்த மசோதா வந்த போது எந்தவொரு கூட்டமைப்பும் அதுபற்றி கேள்வி எழுப்பவில்லை. தற்போது அதில் சில திருத்தங்களை கொண்டு வர இருக்கிறோம்.

1988-ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. 1991-ம் ஆண்டு இந்திய சந்தையை உலக பொருளாதார மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த விஷயத்தில் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள், ஊழல் தடுப்பு சட்டத்தின் முன்நிறுத்த வகை செய்வதாக இருந்தன. எனவே நமக்கு அடுத்ததாக வரும் அதிகாரி அதில் முடிவு எடுக்கட்டும் என்று ஒதுக்கிவிட்டனர். இது தாக்கங்களை ஏற்படுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive