Monday 19 January 2015

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்பு மனு தாக்கல்

திருச்சி, 

ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் எஸ்.வளர்மதி போட்டியிடுகிறார். இவர் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளர் ஆகவும் பதவி வகித்து வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த என். ஆனந்த், தி.மு.க வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளார்.

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி நேற்று மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இருந்து தாலுகா அலுவலகம் வரை அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கையில் கொடிகளுடன் திரண்டு நின்றனர். இதனால் அந்த சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது.

இந்நிலையில் மதியம் 12.45 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான காதர் மைதீனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மொத்தம் 3 பேர்

ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என அழைக்கப்படும் கே.பத்மராஜனும் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். இவர் 167-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மனோகரனிடம், எஸ்.கே.மனோகரன் என்ற சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். ஆக முதல் நாளான நேற்று மட்டும் 3 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர்

தி.மு.க. வேட்பாளர் என்.ஆனந்த் 22-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மனோகரனிடம் மனு தாக்கல் செய்கிறார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive