Thursday 25 December 2014

அஸாம் தாக்குதல்: தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்கும்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

கவுகாத்தி,

ஆதிவாசிகள் பெருமளவில் வசிக்கும் அஸாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர், கோக்ராஜார், சிராக் ஆகிய மாவட்டங்களில் போடோ தீவிரவாதிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அம்மாநிலத்தின், சோனித்பூர், கோக்ராஜார், சிராக் மாவட்டங்களில் உள்ள சோனாஜூலி, விஸ்வநாத் சரியாலி, உல்தாபாணி, மதுபூர் ஹதிஜூலி, ருமிகாதா உள்ளிட்ட ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு குழு விசாரிக்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் இச்சம்பவம் பற்றி அஸாம் முதல்வருடன் பேசினேன். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் முழுவதையும் தேசிய புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத குழுக்கள் யார் அவர்களுடன் யார் யார் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த தாக்குதல் சம்பவத்தை அரசு மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. இதை ஒரு சாதாரண தீவிரவாத தாக்குதலாக எடுத்துக் கொள்ள முடியாது. இது தீவிரவாதத்தின் உச்சம். மத்திய அரசு ஏற்கனவே 50 கம்பெனிகள் கொண்ட பாரா மிலிட்டரி படைகளை அஸாமுக்கு அனுப்பியிருக்கிறது. போடோ தீவிரவாதிகளை ஒடுக்க எல்லா உதவியையும் மத்திய அரசு வழங்க தயாராக இருக்கிறது. இனி அந்த தீவிரவாத குழுக்களுடன் எந்த பேச்சுவார்த்தையையும் மத்திய அரசு நடத்த போவதில்லை. இனி அவர்களுக்கு பதிலடி மட்டுமே. அதற்கான பணியை விரைவாக துவங்குமாறு நான் ஏற்கனவே அஸாம் அரசை கேட்டுக்கொண்டுள்ளேன். தீவிரவாதிகளுக்கு மதம், ஜாதி, இடமெல்லாம் கிடையாது. அவர்கள் தீவிரவாதிகள் அவ்வளவுதான். இதுபோன்ற தாக்குதல்கள் நாட்டிற்கு சவாலாக உள்ளது. ஆனால், நாம் இவர்களை முறியடிப்போம்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive