Thursday 25 December 2014

தவான் - வீராட் கோலி மோதல் உண்மைக்கு மாறான வெறும் கதைகள்- கேப்டன் டோனி தகவல்

புதுடெல்லி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனின் கப்பா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 3-வது நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. 4-ம் நாள் காலையில் தான் ஆட்டத்தின் போக்கு தடாலடியாக மாறி போனது. அதற்கு சில சலசலப்புகளும் அச்சாரமாக அமைந்தன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனின் கப்பா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 3-வது நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. 4-ம் நாள் காலையில் தான் ஆட்டத்தின் போக்கு தடாலடியாக மாறி போனது. அதற்கு சில சலசலப்புகளும் அச்சாரமாக அமைந்தன

நான்காம் நாள் காலையில் புஜாராவுடன் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தான் களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக காலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஷிகர் தவானுக்கு எதிர்பாராத விதமாக வலது மணிக்கட்டில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. இருப்பினும் அது பற்றி உடனடியாக அணி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாத தவான், கடைசி நேரத்தில் கையில் வலி அதிகமாக இருப்பதாகவும், அதனால் தன்னால் பேட் செய்ய இயலாது என்றும் கூறினார்.

அப்போது ஆட்டம் தொடங்க 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் இந்திய துணை கேப்டன் விராட் கோலி அவருக்கு பதிலாக அவசரகதியில் களம் கண்டார். 11 பந்துகளை சந்தித்த அவர் ஒரு ரன்னில் மிட்செல் ஜான்சனின் வேகப்பந்துக்கு இரையானார். மேலும் சில விக்கெட்டுகள் மளமளவென சரியவே 45-வது நிமிடத்தில் தவான் களம் இறங்கினார்.

காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட் செய்த அவர் 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனாலும் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்தியா நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் டோனி, தவான் காயமடைந்து தன்னால் ஆட முடியாது என்ற விவரத்தை மிகவும் தாமதமாக சொன்னதால் வீரர்களின் அறையில் திடீரென அமைதியின்மையும், குழப்பமும் நிலவியதாகவும், அது அணியின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் வேதனையுடன் கூறினார்.

இந்த நிலையில் வீரர்களின் அறையில் அன்றைய தினம் கோலிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் அப்போது கோலி, தவனை நோக்கி சவாலைச் சந்திப்பதிலிருந்து ஓடுகிறாய் என்று கூறியதாகவும் அணி இயக்குநர் ரவிசாஸ்திரி இருவரையும் சமாதானம் செய்ததாகவும் செய்திகள் எழுந்தன.

இது குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-

ஆம் நீங்கள் சொல்வது உண்மை (கேலியாக) கத்தியைக் கொண்டு விராட் கோலி, தாவனை குத்தினார், அதிலிருந்து அவர் மீண்டவுடன் களத்திற்குள் அவரை தள்ளிவிட்டோம் போங்கள்!

இவையெல்லாம் உண்மைக்கு புறம்பான வெறும் கதைகள். மார்வல்-வார்னர் பிரதர்ஸ் இதனைக் கொண்டு படம் தயாரித்து விடலாம். எங்கிருந்து இந்தச் செய்திகளெல்லாம் முளைக்கின்றன என்பது எனக்கு புரிவதில்லை. அணியிலிருந்து யாராவது ஒருவர் இதனை உங்களிடம் கூறியிருந்தால் அவர் பெயரை எங்களுக்குத் தெரிவியுங்கள். ஏனெனில் அவரது கற்பனைத்திறன் அபாரம், அவர் உடனடியாக வார்னர் பிரதர்ஸ் போன்ற திரைப்பட நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார். அந்த நபர் எங்கள் ஓய்வறையில் இருக்க வேண்டிய நபரேயல்ல, ஏனெனில் நடக்காத ஒன்றை அவர் படைக்கிறார் என்றால் அவர் உண்மையில் அபாரத் திறமை கொண்டவர்தானே.

நிஜத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.ஓய்வறை சூழல் அற்புதமாக உள்ளது, எந்த ஒரு விவகாரமும் இல்லை. நாங்கள் அயல்நாடுகளில் விளையாடும் போது கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீடியாக்களிடம் இப்படிப்பட்ட செயல்பாடுகள் தோன்றுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive