Sunday 18 January 2015

பெண் குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு பிரசாரம் பிரதமர் மோடி 22–ந்தேதி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, 
பெண் குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி 22–ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
பாலின பாகுபாடு
கடந்த 2009–ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்து உள்ளது. அதன்படி 1,000 ஆண் குழந்தைகளுக்கு 927 பெண் குழந்தைகள் என்ற விகிதமே இருப்பதாக தெரிய வந்தது. இது 2011–ம் ஆண்டு 919 என்ற அளவுக்கு மேலும் குறைந்தது.
இந்த பாலின பாகுபாட்டை குறைக்கவும், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கவும் மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் போது (அக்டோபர் 11) பிரதமர் ஆற்றிய உரையில் இது தெளிவாக விளக்கப்பட்டது.
பிரதமர் அறிவுரை
அப்போது பேசிய அவர், ‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பெண் சிசுக்கொலை சம்பவங்கள், ஆழ்ந்த கவலையையும், பெருத்த அவமானத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இதை நமது சமூகத்தில் இருந்து அகற்ற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்’ என்று கூறினார்.
பெண் குழந்தைகளும் சமத்துவத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்த அவர், எந்த வகையிலும் பாலின பாகுபாடு கூடாது என்று எடுத்துரைத்தார்.
100 மாவட்டங்களில்...
இந்தநிலையில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றை நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பிரசாரத்தை 22–ந்தேதி (வியாழக்கிழமை) அரியானா மாநிலத்தின் பானிபட் நகரில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து அரியானாவின் 12 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும். பெண் குழந்தைகள் கொலை மற்றும் பெண் சிசு கொலையை தடுத்து, மக்களின் மனநிலையை பெண் குழந்தைகளை நோக்கி திருப்புவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாகும்.
கருத்தரங்கு
முன்னதாக இது தொடர்பான 2 நாள் கருத்தரங்கு இன்றும், 21–ந்தேதியும் நடக்கிறது. இதில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநில முதல் மந்திரிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கிறார்கள்.
இதற்கிடையே பெருநகரங்களில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive