Saturday 24 January 2015

பீகார் மாநிலத்தில் பயங்கரம்: பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலி; 16 பேர் படுகாயம்

அரா, (பீகார்), 

பீகார் கோர்ட்டு வளாகத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

விசாரணைக் கைதிகள்

பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அரா என்ற சிறு நகரம் உள்ளது. இங்குள்ள சிவில் கோர்ட்டில் நேற்று காலை 11.30 மணி அளவில் விசாரணை கைதிகளை ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஒரு வேனில் ஏற்றி வந்தனர்.

அந்த வேன் கோர்ட்டு வளாகத்தில் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு அதில் இருந்த கைதிகள் அனைவரும் ஒவ்வொருவராக கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அங்குள்ள லாக்-அப் அறைக்கு கொண்டு செல்லும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

மனித வெடிகுண்டு தாக்குதல்

அப்போது அந்த வேன் நிறுத்தப்பட்டு இருந்த இடத்துக்கும், அங்கிருந்த புல்வெளி பகுதிக்கும் இடையே உட்கார்ந்து இருந்த 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கே வேகமாக ஓடி வந்தார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றார்.

அப்போது அந்த பெண் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

2 பேர் பலி

இதில் பலத்த குண்டு காயங்களுடன் தூக்கி வீசப்பட்ட அந்த பெண்ணும், போலீஸ்காரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அந்த இடத்தில் நின்றிருந்த 3 போலீஸ்காரர்கள், 3 வக்கீல்கள் உள்பட 16 பேர் பலத்த குண்டு காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைதிகள் தப்பி ஓட்டம்

இதனிடையே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஏற்பட்ட அமளியையும், குழப்பத்தையும் பயன்படுத்தி வேனில் இருந்து கீழே இறக்கப்பட்ட விசாரணைக் கைதிகள் 2 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இவர்கள் இருவரும் பல்வேறு அதிபயங்கர குற்றங்களில் தொடர்பு உடையவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்களைத் தேடிப்பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சிறிது நேரத்தில் கோர்ட்டு வளாகம் இழுத்து மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.

வெடிகுண்டு சிதறல்கள்

மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியான பெண் யார் என்பது இன்னும் அடையாளம் கண்டறியப்படவில்லை. எனினும், பலியான போலீஸ்காரர் பெயர் அமித்குமார்(40) என்பது தெரிய வந்து உள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து வெடிகுண்டு சிதறல்களும், செல்போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு உடனடியாக தேசிய விசாரணை முகமை குழுவினர் விரைந்து வந்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்தனர். இதன்மூலம் குண்டு வெடித்ததன் அடர்த்தி மற்றும் இயற்கைத் தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும்.

தீவிரவாத தாக்குதல் அல்ல

வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து மாநில கூடுதல் டி.ஜி.பி. குப்தேஷ்வர் பாண்டே கூறும்போது, ‘‘இது தீவிரவாத தாக்குதல் சம்பவம் கிடையாது. ஆனால் குண்டு எடுத்து வந்த பெண் மனித வெடிகுண்டாக செயல்பட்டு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பயங்கர குற்றவாளிகளை விடுவிக்கும் நோக்குடன் இந்த தாக்குதலை அந்த பெண் நடத்தி இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என்றார்.

தப்பியோடிய கைதிகள் இருவரும் நந்து சர்மா, அகிலேஷ் உபாத்யாயா என்று தெரிய வந்துள்ளதாக மாநில முன்னாள் உள்துறை செயலாளரும் அரா தொகுதி எம்.பி.யுமான ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

நந்து சர்மா, 2009-ம் ஆண்டு இதேபோன்று தனது கையாட்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பி ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம் அளிக்க உத்தரவு

மனித வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக பீகார் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்படலாம் என்பதால் அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை உத்தரவிட்ட நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்து உள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive