Thursday 25 December 2014

உமர்அப்துல்லா - அமித்ஷா சந்திப்பு தொடர்பான தகவலுக்கு பா.ஜனதா மறுப்பு

உமர்அப்துல்லா - அமித்ஷா சந்திப்பு தொடர்பான தகவலை பாரதீய ஜனதா கட்சி மறுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பார்த்தபடியே தொங்கு சட்டசபை அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜார்கண்டில் ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா கட்சி, இங்கு 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2–வது பெரிய கட்சியாக வந்துள்ளது. இங்கு முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 12 இடங்களுடன் 4–வது இடத்தில் உள்ளது.

மாநிலத்தில் ஆட்சியை அமைக்க பாரதீய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலை ஆட்சியில் இருந்து வெளியேறும் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர்அப்துல்லா, டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியது. இந்த தகவல்களை பாரதீய ஜனதா கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதேவ் டூவிட் செய்கையில், "டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களை சந்தித்து பேசினர் என்பது தொடர்பான செய்து முற்றிலும் அடிப்படையற்றது." என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே காங்கிரஸ், முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க நாங்கள் எங்களது ஆதரவை தெரிவித்துவிட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

சபரிமலையை தேசிய புனிதயாத்திரை தலமாக தரம் உயர்த்த பிரதமருக்கு கோவில் நிர்வாகம் கோரிக்கை

சபரிமலை,

கேரளாவின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலை தேசிய புனிதயாத்திரை தலமாக தரம் உயர்த்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

நிதி ஒதுக்கீடு
சபரிமலையை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதில் முதல் கட்ட மேம்பாட்டு நிதியாக ரூ.500 கோடியை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரியில் கேரளாவிற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அவரை கோவில் நிர்வாகத்தினர் சந்திக்க உள்ளனர்.  கேரளாவில் புகழ் பெற்ற 35வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வர இருக்கிறார்.

12 வரிசை வளாகங்கள்
சபரிமலையின் மேம்பாட்டிற்கு வன நிலங்கள் தேவையாக உள்ளன.  உலகம் முழுவதிலும் இருந்து வரும் ஆயிரக்கணக்கான புனித பக்தர்கள் எளிதாக நகர்ந்து செல்வதற்காக 12 வரிசைகள் கொண்ட வளாகங்கள் கட்டப்பட உள்ளன.  அவற்றில் 3 வளாகங்களுக்கான ஒப்பந்த பணிகள் நிறைவேறியுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் சட்ட கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு வழக்கு: 2 பேர் கைது

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நவ்ஷெரா பகுதியில் டிசம்பர் மாத தொடக்கத்தில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் மீது திராவகம் வீசப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 11ந்தேதி ஸ்ரீநகரின் நவ்ஷெரா பகுதியில் சட்ட கல்லூரி அருகே 21 வயது நிறைந்த மாணவி ஒருவர் மீது மாருதி காரில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திராவகத்தை வீசி உள்ளார்.  அந்த மாணவி கல்லூரியில் திறமையானவர்.  திராவக வீச்சில் மாணவிக்கு 40 சதவீதம் அளவுக்கு முகத்தில் காய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து பலத்த கண்டனங்கள் எழுந்தன.  குற்றவாளிகளை உடனே கைது செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களில் ஒருவன் பெமீனா பகுதியையும் மற்றொருவன் லால் மாண்டி பகுதியையும் சேர்ந்தவன் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரெயில்வே துறையை தனியார்மயமாக்க மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி

வாரணாசி,

வாரணாசியில் டீசல் ரெயில் என்ஜின் தொழிற்சாலையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்திய ரெயில்வே துறையை தனியார் மயமாக்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.

ரெயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாகவும், இந்திய ரெயில்வேயின் திறமைகளை மேம்படுத்த 4 ரெயில்வே பல்கலைக்கழகங்களை அமைப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரெயில்வே துறையை மாற்றப்போவதாகவும் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

சொந்த தொகுதியான வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரர் மதன்மோகன் மாளவியாவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திவிட்டு பின் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்தார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்திற்கான உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்தார். 

தேர்தலுக்காக ராஜபக்சே இரட்டை வேடம் போடுகிறார் கருணாநிதி குற்றசாட்டு

சென்னை,

தேர்தலுக்காக, போர் குற்ற விசாரணை நடத்த தயார் என்று ராஜபக்சே இரட்டை வேடம் போடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஜனவரி 8-ந் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 19 பேர் மனு செய்திருந்த போதிலும், 2 பேர் மட்டுமே பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரி பால சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றன. ரனில் விக்கிரமசிங்கேயும், சந்திரிகாவும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டியதற்கு மாறாக, ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, அந்தச் செய்தி இந்தியா முழுவதும் கண்டனத்திற்குரிய ஒன்றாக இருந்தது.

இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடும் சிறிசேனா, கடந்த மாதம் வரை ராஜபக்சே அரசில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு ராஜபக்சேவின் அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆதரவு தெரிவித்த அமைச்சர்களை ராஜபக்சே விலக்கிவிட்டார்.
மேலும் இலங்கையின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்து வந்த ரிஷத் பதியுதீனும், அவருடைய அனைத்து சிலோன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான அமிர் அலி ஆகியோரும் சிறீசேனாவை ஆதரித்து பிரசாரம் செய்யப் போகிறார்களாம்.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால் தங்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்ற எண்ணத்தில் உள்ளார்கள். தமிழர்களின் வாக்குகளைப் பெற ராஜபக்சே ஒரு சில புதிய வாக்குறுதிகளை வழங்க முன்வந்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப்போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்றுக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஒரு புதிய வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்படும் என்று ராஜபக்சே தங்களது தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். போரின்போது எந்த உரிமைகளாவது மீறப்பட்டிருந்தால், அது குறித்த வெளிப்படையான உள்நாட்டு நீதித் துறை அமைப்பு மூலம் விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என்று ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.

மேலும், தமிழர் பகுதிகளில் பிரசாரம் செய்யும்போது ராஜபக்சே கடந்த காலத்தவறுகளை மறந்து விடுங்கள் என்று கூறிய போதிலும், அவர் தமிழ் அமைப்புகளிடம் ஓட்டுக் கூட்டணி வைக்க முன்வரவில்லை. போட்டியிடும் 2 பேருமே, சிறுபான்மையான தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தால், பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாமல் போய்விடுமோ என்று எண்ணுகிறார்கள்.

வடகிழக்கில் தமிழர்களை மீண்டும் குடியேற்ற உதவி செய்வது போன்ற எந்தவொரு முடிவையும் இரு தரப்பினரும் அறிவிக்க முன் வரவில்லை. இதே ராஜபக்சே கடந்த காலத்தில் எல்.எல்.ஆர்.சி., அறிக்கையின் பரிந்துரைகளையும், 13-வது சட்டத் திருத்தத்தையும் நிறைவேற்றி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவேன் என்றார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நானும், டெசோ இயக்கமும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்.

இதுகுறித்து, என்னுடைய கடிதத்தை நியூயார்க் நகரிலே உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினும், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவும் நேரடியாகச் சென்று வழங்கினார்கள். தொடர்ந்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்களும், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் ராஜபக்சே அதற்கெல்லாம் இணங்காமல், சர்வதேச விசாரணை என்ற ஒன்றே தேவையில்லை என்று அப்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கெல்லாம் மாறாக தற்போது தேர்தல் என்றதும், தமிழர்களின் வாக்குகள் தேவை என்பதற்காக கடந்த கால போர்க் குற்றத் தவறுகளுக்கு விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாக கூறியிருப்பதில் இருந்து, அவர் எப்படிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகிறார் என்பதை தெளிவாகத் தெரிந்துக்கொள்ள முடிகிறது அல்லவா?.

கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதைப் போல ராஜபக்சே தற்போது தன்னையே மாற்றிக் கொண்டு இரட்டை வேடம் போடுகிறார் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தவான் - வீராட் கோலி மோதல் உண்மைக்கு மாறான வெறும் கதைகள்- கேப்டன் டோனி தகவல்

புதுடெல்லி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனின் கப்பா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 3-வது நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. 4-ம் நாள் காலையில் தான் ஆட்டத்தின் போக்கு தடாலடியாக மாறி போனது. அதற்கு சில சலசலப்புகளும் அச்சாரமாக அமைந்தன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனின் கப்பா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 3-வது நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. 4-ம் நாள் காலையில் தான் ஆட்டத்தின் போக்கு தடாலடியாக மாறி போனது. அதற்கு சில சலசலப்புகளும் அச்சாரமாக அமைந்தன

நான்காம் நாள் காலையில் புஜாராவுடன் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தான் களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக காலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஷிகர் தவானுக்கு எதிர்பாராத விதமாக வலது மணிக்கட்டில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. இருப்பினும் அது பற்றி உடனடியாக அணி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாத தவான், கடைசி நேரத்தில் கையில் வலி அதிகமாக இருப்பதாகவும், அதனால் தன்னால் பேட் செய்ய இயலாது என்றும் கூறினார்.

அப்போது ஆட்டம் தொடங்க 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் இந்திய துணை கேப்டன் விராட் கோலி அவருக்கு பதிலாக அவசரகதியில் களம் கண்டார். 11 பந்துகளை சந்தித்த அவர் ஒரு ரன்னில் மிட்செல் ஜான்சனின் வேகப்பந்துக்கு இரையானார். மேலும் சில விக்கெட்டுகள் மளமளவென சரியவே 45-வது நிமிடத்தில் தவான் களம் இறங்கினார்.

காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட் செய்த அவர் 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனாலும் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்தியா நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் டோனி, தவான் காயமடைந்து தன்னால் ஆட முடியாது என்ற விவரத்தை மிகவும் தாமதமாக சொன்னதால் வீரர்களின் அறையில் திடீரென அமைதியின்மையும், குழப்பமும் நிலவியதாகவும், அது அணியின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் வேதனையுடன் கூறினார்.

இந்த நிலையில் வீரர்களின் அறையில் அன்றைய தினம் கோலிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் அப்போது கோலி, தவனை நோக்கி சவாலைச் சந்திப்பதிலிருந்து ஓடுகிறாய் என்று கூறியதாகவும் அணி இயக்குநர் ரவிசாஸ்திரி இருவரையும் சமாதானம் செய்ததாகவும் செய்திகள் எழுந்தன.

இது குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-

ஆம் நீங்கள் சொல்வது உண்மை (கேலியாக) கத்தியைக் கொண்டு விராட் கோலி, தாவனை குத்தினார், அதிலிருந்து அவர் மீண்டவுடன் களத்திற்குள் அவரை தள்ளிவிட்டோம் போங்கள்!

இவையெல்லாம் உண்மைக்கு புறம்பான வெறும் கதைகள். மார்வல்-வார்னர் பிரதர்ஸ் இதனைக் கொண்டு படம் தயாரித்து விடலாம். எங்கிருந்து இந்தச் செய்திகளெல்லாம் முளைக்கின்றன என்பது எனக்கு புரிவதில்லை. அணியிலிருந்து யாராவது ஒருவர் இதனை உங்களிடம் கூறியிருந்தால் அவர் பெயரை எங்களுக்குத் தெரிவியுங்கள். ஏனெனில் அவரது கற்பனைத்திறன் அபாரம், அவர் உடனடியாக வார்னர் பிரதர்ஸ் போன்ற திரைப்பட நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார். அந்த நபர் எங்கள் ஓய்வறையில் இருக்க வேண்டிய நபரேயல்ல, ஏனெனில் நடக்காத ஒன்றை அவர் படைக்கிறார் என்றால் அவர் உண்மையில் அபாரத் திறமை கொண்டவர்தானே.

நிஜத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.ஓய்வறை சூழல் அற்புதமாக உள்ளது, எந்த ஒரு விவகாரமும் இல்லை. நாங்கள் அயல்நாடுகளில் விளையாடும் போது கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீடியாக்களிடம் இப்படிப்பட்ட செயல்பாடுகள் தோன்றுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீரில் பாரதீய ஜனதா வீட்டோ பவருடன் உள்ளது: அருண் ஜெட்லி

ஜம்மு,

காஷ்மீரில் ஆட்சியமைக்க பாரதீய ஜனதாவுக்கு பல்வேறு வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அங்கு பாரதீய ஜனதா வீட்டோ பவரை பெற்றுள்ளதாகவும் மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

சுயேட்சை மற்றும் தனிப்பட்ட எம்.எல்.ஏக்களிடம் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து பேசி வருகிறது. காஷ்மீரில் யார் ஆட்சி அமைத்தாலும் அதில் பாரதீய ஜனதா கட்சியின் பங்கு மிக முக்கியதானதாகவே இருக்கும். தற்போது நாங்கள் (பா.ஜ.க.) வீட்டோ அதிகாரத்தை பெற்றுள்ளோம். இதற்கு முன் இந்த அதிகாரம் காங்கிரசின் கையில் இருந்தது. இப்போது பா.ஜ.க.வின் கைக்கு வந்துள்ளது. காஷ்மீரில் ஆட்சியமைப்பதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கட்சி தலைவர் அமித் ஷாவே முடிவு செய்வார். எங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் திறந்தே இருக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், ஆட்சியமைப்பதற்கே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சி எம்.எல்.ஏக்கள் இந்த பிரச்சனையை விவாதித்து வருகிறார்கள். தொங்கு சட்டசபையில் எந்த மாதிரியான அரசு அமையும், சட்டப்பேரவையில் கட்சியை யார் வழிநடத்தி செல்வார் என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் கட்சி தலைவர் அமித் ஷாவின் வழிநடத்தலில் செல்லும் முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் அமைக்க முடிவு

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 148 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்.  இதனை அடுத்து தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த டிசம்பர் 16ந்தேதி அந்நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த தாக்குதலில் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.  இதனை தொடர்ந்து தீவிரவாதிகளின் கொடூர செயல்களுக்கு அவர்கள் விலை கொடுக்கும் வகையில் சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் நவாஸ் ஷெரீப்


இதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் முக்கிய அரசியல் கட்சிகள் நேற்று கூடி விவாதித்துள்ளனர்.  இது தொடர்பான கூட்டம் 11 மணிநேரம் தொடர்ந்து நீடித்தது.  கூட்ட முடிவில் தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்களை 2 வருடங்கள் வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  இந்த நீதிமன்றங்களில் ராணுவ அதிகாரிகள் விரைவாக வழக்குகளை நடத்தி முடிப்பார்கள்.

கூட்டத்தில் பாகிஸ்தான் தெரீக்-ஈ-இன்சாப் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-குவாய்ட், கவுமி வாடன் கட்சி, பலுசிஸ்தான் தேசிய கட்சி மற்றும் சில சிறிய அமைப்புகளும் கலந்து கொண்டன.  கூட்டத்திற்கு பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் குர்ஷீத் ஷா கூறுகையில், ராணுவ நீதிமன்றங்களை குறைந்த காலத்திற்கு அமைப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

அஸாம் தாக்குதல்: தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்கும்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

கவுகாத்தி,

ஆதிவாசிகள் பெருமளவில் வசிக்கும் அஸாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர், கோக்ராஜார், சிராக் ஆகிய மாவட்டங்களில் போடோ தீவிரவாதிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகின்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அம்மாநிலத்தின், சோனித்பூர், கோக்ராஜார், சிராக் மாவட்டங்களில் உள்ள சோனாஜூலி, விஸ்வநாத் சரியாலி, உல்தாபாணி, மதுபூர் ஹதிஜூலி, ருமிகாதா உள்ளிட்ட ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு குழு விசாரிக்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் இச்சம்பவம் பற்றி அஸாம் முதல்வருடன் பேசினேன். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் முழுவதையும் தேசிய புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத குழுக்கள் யார் அவர்களுடன் யார் யார் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த தாக்குதல் சம்பவத்தை அரசு மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. இதை ஒரு சாதாரண தீவிரவாத தாக்குதலாக எடுத்துக் கொள்ள முடியாது. இது தீவிரவாதத்தின் உச்சம். மத்திய அரசு ஏற்கனவே 50 கம்பெனிகள் கொண்ட பாரா மிலிட்டரி படைகளை அஸாமுக்கு அனுப்பியிருக்கிறது. போடோ தீவிரவாதிகளை ஒடுக்க எல்லா உதவியையும் மத்திய அரசு வழங்க தயாராக இருக்கிறது. இனி அந்த தீவிரவாத குழுக்களுடன் எந்த பேச்சுவார்த்தையையும் மத்திய அரசு நடத்த போவதில்லை. இனி அவர்களுக்கு பதிலடி மட்டுமே. அதற்கான பணியை விரைவாக துவங்குமாறு நான் ஏற்கனவே அஸாம் அரசை கேட்டுக்கொண்டுள்ளேன். தீவிரவாதிகளுக்கு மதம், ஜாதி, இடமெல்லாம் கிடையாது. அவர்கள் தீவிரவாதிகள் அவ்வளவுதான். இதுபோன்ற தாக்குதல்கள் நாட்டிற்கு சவாலாக உள்ளது. ஆனால், நாம் இவர்களை முறியடிப்போம்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

ஆன்லைனில் டாப்-அப் செய்யும் வசதி: மும்பை மெட்ரோ அறிமுகம்

மும்பை,

மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஸ்மார்ட் கார்டு வசதி மூலம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் டிக்கெட் எடுத்துக் கொள்கின்றனர். சென்னையிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் வசதி உள்ளது. ஆனால், இதற்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. அதனால், பயணிகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கார்டு வசதி வரவுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக நவீன வசதிகளை அளிக்கும் பொருட்டு இண்டர்நெட் வசதி கொண்ட செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களில் இருந்து அவர்களாகவே தங்கள் ஸ்மார்ட் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளும் ஆன்லைன் டாப்-அப் வசதியை மும்பை மெட்ரோ ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியை 50-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் இண்டர்நெட் பேங்கிக், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளில் பெறலாம்.

Total Pageviews

Popular Posts

Blog Archive