Thursday 22 January 2015

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ந் தேதி தொடங்குகிறது: பிப்ரவரி 28-ந் தேதி பட்ஜெட் தாக்கல்; பிப்.26-ல் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் ஆகும்

புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் மத்திய அரசின் பட்ஜெட் (வரவு–செலவு திட்டம்) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
பிப்ரவரி 23–ந் தேதி கூடுகிறது
இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 23–ந் தேதி தொடங்கி மே மாதம் 8–ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தொடர் முதல் கட்டமாக பிப்ரவரி 23–ந் தேதி தொடங்கி மார்ச் 20–ந் தேதி வரை 32 நாட்கள் நடைபெறும். அதன்பிறகு ஒரு மாத கால விடுமுறைக்கு பின் 2–வது கட்டமாக ஏப்ரல் 20–ந் தேதி தொடங்கி மே 8–ந் தேதி வரை 19 நாட்கள் நடைபெறும்.
75 நாட்களை கொண்ட இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 51 நாட்கள் பாராளுமன்றம் கூடும்.
ஜனாதிபதி உரை
இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தொடக்க நாளான பிப்ரவரி 23–ந் தேதி இரு சபைகளின் கூட்டு கூட்டமாக நடைபெறும். இந்த கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துவார்.
பிப்ரவரி 24 மற்றும் 25–ந் தேதிகளில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். பின்னர் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்.
பட்ஜெட் தாக்கல்
2015–2016–ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 28–ந் தேதி (சனிக்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண் ஜெட்லி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அப்போது புதிய வரிகள், வரிச்சலுகைகள், திட்டங்களுக்கான ஒதுக்கீடு போன்றவற்றை அவர் அறிவிப்பார்.
மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றதும், ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். ஆனால் வருகிற பிப்ரவரி மாதம்தான் அவர் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
ரெயில்வே பட்ஜெட்
முன்னதாக பிப்ரவரி 26–ந் தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ரெயில்வே இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அப்போது புதிய ரெயில்கள், புதிய திட்டங்கள், பயணிகள் மற்றும் சரக்கு கட்டண மாற்றம் போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.
27–ந் தேதி பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் ஆகும்.
டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு (பாராளுமன்ற விவகாரம்), சதானந்த கவுடா (சட்டம்), அனந்த குமார் (ரசாயனம்), நஜ்மா ஹெப்துல்லா (சிறுபான்மையினர் விவகாரம்), பிரகாஷ் ஜவதேகர் (சுற்றுச்சூழல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிலுவையில் உள்ள மசோதாக்கள்
பாராளுமன்ற மக்களவையில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ள போதிலும், டெல்லி மேல்–சபையில் போதிய பலம் இல்லை. இதனால் மத்திய அரசால் முக்கியமான மசோதாக்களை மேல்–சபையில் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக மேல்–சபையில் நிலுவையில் உள்ள 9 மசோதாக்கள் உள்பட மொத்தம் 66 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டம், ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு (2–வது திருத்தம்) மசோதா, லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது.
அவசர சட்டங்கள்
சமீபத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அவசர சட்டம், காப்பீடு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் அவசர சட்டம், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் உள்ளிட்ட 6 அவசர சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்தது. இந்த அவசர சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது.
மேல்–சபையில் மசோதாக்களை நிறைவேற்ற முடியாத உறுதியான நிலை ஏற்படும் பட்சத்தில், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தை கூட்டி மசோதாக்களை அரசு நிறைவேற்றக்கூடும் என்று கருதப்படுகிறது.
மத்திய அரசு அவசர சட்டங்களை பிறப்பித்ததற்கு காங்கிரஸ் கட்சி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
வெங்கையா நாயுடு
நேற்று மந்திரிகள் குழு கூட்டம் முடிந்த பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மந்திரி வெங்கையா நாயுடு இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆட்சி காலங்களிலும் அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஆண்டுகளில் மட்டும் 77 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டதாகவும், அப்போது இடதுசாரி கட்சிகளும் அந்த அரசில் அங்கம் வகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் 28–ந் தேதி விடுமுறை நாளான சனிக்கிழமை ஆகும். இதுபற்றி கருத்து தெரிவித்த மூத்த மந்திரி ஒருவர், கடந்த காலங்களிலும் இதுபோல் சனிக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
மதமாற்ற விவகாரம்
கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை கிளப்பி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் சபைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தின. இதனால் கிட்டத்தட்ட தினந்தோறும் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவு வெளியாகி அங்கு புதிய அரசு அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தல் முடிவும் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive