Thursday 22 January 2015

அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி, உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆய்வு சென்னையில் 4 லட்சம் வீடுகள் கட்டப்படும்

புதுடெல்லி,
அனைவருக்கும் வீடு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர் மட்டக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த திட்டத்தின்கீழ் சென்னையில் 4 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வீடு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு, 2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.
கடந்த ஆண்டு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கூடிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைகிற நிலையில், குடிநீர் இணைப்பு, கழிவறை வசதி, 24 மணி நேரமும் மின்வசதி, சாலை வசதி கொண்ட வீட்டினை ஒவ்வொரு குடும்பமும் பெற வேண்டும்’’ என கூறினார்.
பட்ஜெட்டில் அறிவிப்பு
2014–2015 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோதும், அனைவருக்கும் வீடு என்னும் இந்த திட்டம் பற்றி குறிப்பிட்டார்.
அப்போது அவர், ‘‘2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற அரசு கடும் முயற்சிகள் எடுக்கும். இந்த நோக்கத்திற்காக, மக்களை ஊக்குவிக்கும் வகையில் வீட்டு வசதி கடன்களுக்கு கூடுதல் வரிச்சலுகை வழங்க எண்ணியுள்ளோம்’’ என கூறினார்.
சென்னையில் 4 லட்சம் வீடுகள்
இந்த திட்டத்தின்படி, 2022–ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநகரங்கள், சிறுநகரங்கள், நகர்ப்புறங்களில் இந்த வீடுகள் கட்டப்படும். சென்னையில் 4 லட்சம், டெல்லியில் 6 லட்சம், மும்பையில் 16 லட்சம், கொல்கத்தாவில் 4 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு வடிவம் கொடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
உயர் மட்டக்குழு கூட்டம்
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று உயர் மட்டக்குழு கூட்டம் நடத்தி, திட்டம் பற்றி ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, அந்த துறைக்கான ராஜாங்க மந்திரி பாபுல் சுப்ரியோ மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைவருக்கும் வீடு திட்டத்தினை உடனடியாக இறுதி செய்ய வேண்டும், வீட்டு வசதி செய்து தருவதற்கு நிதி வழங்கும் விதத்தை முடிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னுரிமை
இந்த சிறப்பு திட்டத்தை நிறைவேற்றுகிறபோது அதன் தரத்தில் சமரசம் செய்யக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், நகரங்களைப் பொறுத்தமட்டில் கடலோர பகுதி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாத பகுதி, இயற்கை பேரிடர்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
முதலில், சிறுநகரங்கள், நகரங்கள், கங்கை நதிக்கரைகள், அதன் துணை நதிக்கரைகளில் வீடுகள் கட்டித்தருவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive