Tuesday 20 January 2015

கேரள மந்திரி கே.எம். மாணிக்கு சிக்கல் வலுக்கிறது: ஒலிநாடாவால் ஊழல்கள் அம்பலம்

கேரள மந்திரி கே.எம். மாணிக்கு சிக்கல் வலுக்கிறது: ஒலிநாடாவால் ஊழல்கள் அம்பலம்திருவனந்தபுரம், ஜன. 20-

மாநிலம் முழுவதும் மது விலக்கை அமல்படுத்த முடிவு எடுத்த கேரள அரசு, முதல்கட்டமாக மதுபான பார்களை மூட உத்தரவிட்டது. இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பார்களை மூட அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அது தள்ளுபடி ஆனதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை வாங்கினர். இதையடுத்து மாநிலத்தில் மீண்டும் மதுபார்கள் திறக்கப்பட்டன.

இது தொடர்பான விவாதங்கள் நடந்து வந்த நிலையில் மதுபான பார்களை திறக்க மந்திரி மாணி ரூ.5 கோடி கேட்டதாகவும், அதில் அவருக்கு ரூ.1 கோடி கொடுக்கப்பட்டதாகவும் பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜு ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார். இந்த நிலையில் மாணி மேலும் பலரிடம் இது போன்று பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஒலிநாடா ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த ஒலிநாடாவில் காங்கிரஸ்(பி) கட்சி தலைவரான பாலகிருஷ்ண பிள்ளை, அரசின் தலைமை கொறடாவும், கேரள காங்கிரஸ் மாணி பிரிவின் துணை தலைவரான பி.சி.ஜார்ஜ் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிஜு ரமேஷ் ஆகியோருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அதில் ரமேஷிடம் நிதியமைச்சர் மாணியை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு பிள்ளை கூறியுள்ளார். மேலும் நிதி மந்திரி மாணி அரிசி ஆலை உரிமையாளர்களிடம் 2 கோடி ரூபாயும், நகை விற்பன்னர்களிடமிருந்து 19 கோடி ரூபாயும் லஞ்சமாக பெற்றுள்ளதாக கூறிய பிள்ளை, இது குறித்து முதல்வரிடம் தான் முறையிட்டுள்ளதாகவும் அந்த ஒலிநாடாவில் கூறியுள்ளார். இவரை போன்ற மோசமான அமைச்சர்கள் யாரையும் நான் பார்த்ததேயில்லை என்றும் பிள்ளை அந்த ஒலிநாடாவில் பேசியுள்ளார்.

அதே போல் ரமேஷிடம் பி.சி.ஜார்ஜ் பேசும் ஒலிநாடாவில், கட்சியின் தலைவர் மாணிக்கு ஆதரவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கருத்து தெரிவித்துள்ள போதிலும், அதற்கு எந்த முக்கியத்துவமும் தரவேண்டாம் என்று அவர் கூறியது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே மாணி மீதான இந்த புதிய குற்றச்சாட்டுகள் அவருக்கு பெருத்த சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive