Thursday 22 January 2015

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13–வது சட்ட திருத்தம்: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு உலக தமிழர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது கருணாநிதி அறிக்கை

சென்னை,
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பது, ‘உலக தமிழர்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது’ என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
13–வது சட்ட திருத்தம்
இந்தியா–இலங்கை இடையே 1987–ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுற்று, இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும், அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். அதன் தொடர்ச்சியாக இலங்கை அரசியல் சட்டத்தில், 13–வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழர்கள் அங்கே வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்கப்படும் என்பதற்கு அந்த சட்டத்திருத்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது.
மேலும் சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியையும் ஆட்சி மொழியாக அங்கீகரிப்பதற்கும், மாகாண வாரியாக உயர்நீதிமன்றங்களை அமைப்பதற்கும் அந்த சட்டத்திருத்தம் உறுதி அளித்திருந்தது. ஆனால் அதற்கு பிறகு பொறுப்புக்கு வந்த இலங்கை அரசுகள் அந்த சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், 13–வது சட்டத்திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதனால், மாகாணங்களுக்கு அங்கே இதுவரை அதிகாரப்பகிர்வு கிடைக்கவில்லை. எனவே இந்த 13–வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசு இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
தி.மு.க.வின் சார்பில் பல முறை இந்த 13–வது சட்டத்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தி வந்தோம்.
உலக தமிழர்களுக்கு நம்பிக்கை
இந்த பிரச்சினையில் தான் தற்போது இலங்கையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சிறிசேனாவின் அரசில் பிரதமர் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நேற்றைய (நேற்றுமுன்) தினம் முதல் முறையாக கூடிய பாராளுமன்றத்திலே 13–வது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது நமக்கெல்லாம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
அவர் பேசும்போது, ‘‘மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வகை செய்யும் 13–வது அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையிலும் சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை எட்டுவதற்காகவும் இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்தப்போகிறோம்’’ என்றெல்லாம் கூறியிருப்பது, இலங்கை தமிழர்கள்பால் அக்கறை கொண்ட உலகத் தமிழர்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சிறிசேனாவின் அரசு இந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்றும், இலங்கை தமிழர்களுக்கு தேவையானவற்றை பேச்சுவார்த்தை மூலம் விரைவிலே தீர்வுகாண முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive