Saturday 24 January 2015

சொத்து குவிப்பு வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்டது ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதம்

பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், சட்டத்திற்கு புறம்பாகவும் தொடரப்பட்டது என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை எடுத்து வைத்தார்.

சொத்து பட்டியல் 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, சொத்து பட்டியலை சுருக்கமாக அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், நேற்று 13–வது நாளாக மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ், 25 பக்கங்கள் கொண்ட சொத்து பட்டியலை நீதிபதியிடம் வழங்கினார்.

வருமான வரி 


பின்னர் அவர் வாதிடுகையில், ‘என்னுடைய வாதத்தின் அடிப்படையில் ரூ.66.65 கோடிக்கான சொத்து பட்டியலை வழங்கியுள்ளேன். இதற்கான வரிமான வரி முறையாக செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சொத்து பட்டியல் தவிர லஞ்ச ஒழிப்பு துறையினரால் வழக்கில் சேர்க்காத ரூ.96 லட்சம் சேமிப்பு கணக்கில் கூடுதலாக உள்ளது. இதற்கான வருமான வரியும் செலுத்தப்பட்டு இருக்கிறது’ என்றார்.

உடனே நீதிபதி குறுக்கிட்டு, ‘இதனை கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளீர்களா? அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா?’ என்று கேட்டார். உடனே வக்கீல் நாகேஸ்வரராவ், கீழ் கோர்ட்டில் உரிய ஆவணங்கள தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறியதுடன், அதற்கான ஆவணங்களை தேடிக்கொண்டு இருந்தார்

அறிக்கை பொய்யானது 

அப்போது அரசு தரப்பு வக்கீல் பவானிசிங் குறுக்கிட்டு, ‘இந்த அறிக்கை பொய்யானது, வழக்கை திசை திருப்பும் நோக்கத்துடன் சொத்து மதிப்பு கூடுதலாக காட்டப்பட்டு உள்ளது’ என்று கூறினார். உடனே நீதிபதி, ‘உங்களிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளதா?’ என்று கேட்டார். அதற்கு தன்னுடைய வாதத்தின்போது அவற்றை தாக்கல் செய்வதாக பவானிசிங் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, ‘இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யார்?’ என்று கேட்டார். இதற்கு ‘சம்பந்தம்’ என்று பவானிசிங் பதில் அளித்தார். அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வக்கீல் சரவணன் குறுக்கிட்டு, ‘இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு தான். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறேன்’ என்று கூறினார்.

வக்கீல்கள் லேசான வாக்குவாதம் 


உடனே பவானிசிங் குறுக்கிட்டு, ‘ஓய்வு பெற்ற அதிகாரியை எப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியும்?’ என்று கேட்டார். இதனால் பவானிசிங்குக்கும், சரவணனுக்கும் லேசான வாக்குவாதம் உண்டானது.

அப்போது நீதிபதி வக்கீல் சரவணனை பார்த்து, ‘உங்களது மனுதாரர் அன்பழகன் எங்கே?’ என்று கேட்டார். உடனே சரவணன், அவருக்கு பதிலாக தான் வக்காலத்து தாக்கல் செய்து வாதம் செய்து வருவதாக கூறினார்.

பின்னர் மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் வாதாடும்போது, ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா தனது சொந்த செலவில் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அந்த திருமணம் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினரால் செய்யப்பட்டது ஆகும். கட்சியின் தலைவர் என்ற முறையில் திருமண விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டார். சுதாகரன் திருமணத்திற்காக ஜெயலலிதா ரூ.6 கோடி செலவு செய்ததாக கூறுவது தவறானது’ என்றார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி 

பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது வாதத்தை தொடங்கிய வக்கீல் நாகேஸ்வரராவ், ‘திராட்சை தோட்டத்தின் மூலம் கிடைத்த வருமானம், நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மூலம் கிடைத்த ரூ.14 கோடி, 7 கிலோ 40 கிராம் தங்க நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் அனைத்திற்கும் உரிய வருமான வரி செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு முற்றிலும் சட்டத்திற்கு விரோதமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் தொடரப்பட்டது ஆகும்’ என்றார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 27–ந்தேதிக்கு நீதிபதி குமாரசாமி ஒத்திவைத்தார்.நேற்றுடன் ஜெயலலிதா தரப்பு வக்கீல் நாகேஸ்வரராவின் முதல்கட்ட வாதம் நிறைவுபெற்றது. இதனால் வருகிற 27–ந்தேதி சசிகலா சார்பில் அவரது வக்கீல் வாதத்தை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive