Saturday 24 January 2015

இந்த ஆண்டு அத்வானி, ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது?

புதுடெல்லி, 

இந்த ஆண்டில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பத்ம விபூஷண் விருது

கலை, இலக்கியம், மருத்துவம், சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டு தோறும் மத்திய அரசு தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. குடியரசு தின விழாவையொட்டி, விருதுகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவிக்கும்.

இந்த நிலையில், இந்த ஆண்டில் பத்ம விருது பெற வாய்ப்பு உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 148 பேர் பற்றியவிவரம் நேற்று வெளியானது.

ரஜினிகாந்த்

பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், யோகா குரு பாபா ராம்தேவ், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் ஆகியோர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார், இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி, நடிகர் சல்மான் கானின் தந்தையும் பாடல் ஆசிரியருமான சலீம் கான் உள்ளிட்ட பலரது பெயர்களும் பத்ம விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக அந்த தகவல் தெரிவித்தது.

மத்திய அரசு மறுப்பு

ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்து உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘‘பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதிதான் அறிவிக்கப்படும். 2015-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பற்றி மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. எனவே விருதுகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டதாக வெளியான பெயர் பட்டியல் ஊகத்தில் அடிப்படையிலானது ஆகும். அந்த பட்டியல் அரசின் ஒப்புதல் பெற்றது அல்ல’’ என்றார்.

தகவல் இல்லை

பத்ம விபூஷண் விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் பற்றி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அது பற்றிய தகவல் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive