Thursday 22 January 2015

டெல்லி சட்டசபை தேர்தல்: கிரண்பேடி–அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி,
டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி வேட்பாளர்களான பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த கிரண்பேடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நேற்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
கிரண்பேடி மனுதாக்கல்
டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 7–ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மோதுகின்றன. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் பா.ஜனதா முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடியை களத்தில் இறக்கி உள்ளது.
முதல்–மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண்பேடி டெல்லியில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தொண்டர்களுடன் திறந்த வேனில் ஊர்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் செய்தார். அவருடன் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன், விஜய் கோயல் மற்றும் டெல்லி மாநில நிர்வாகிகள் சென்றனர்.
முன்னதாக கடைக்காரர்களிடம் ஆதரவு திரட்டியபடி சென்ற அவர், வழியில் சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் சிலைக்கு பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சின்னம் உடைய சால்வையை அணிவித்து வணங்கினார்.
கெஜ்ரிவால் மனுதாக்கல்
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தை கடந்து அவர் காலதாமதமாக சென்றதால் மனுதாக்கல் செய்ய முடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதனையடுத்து நேற்று காலை தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற கெஜ்ரிவால் தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கிரண்பேடிக்கு கண்டனம்
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சுதந்திர போராட்ட தியாகி லாலா லஜபதிராய் சிலைக்கு பாரதீய ஜனதா சின்னம் கொண்ட சால்வை அணிவித்தது தவறு. சுதந்திர போராட்ட தியாகிகளையாவது விட்டு வையுங்கள். அவர்களுக்கு காவிச்சாயம் பூசி விடாதீர்கள். சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த கட்சியையும் சேராதவர்கள். அவர்கள் நாட்டுக்கே சொந்தமானவர்கள். அவர்களை பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர், காங்கிரசைச் சேர்ந்தவர் என்று நாம் பிரித்து விடக்கூடாது’ என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive