Saturday 24 January 2015

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை அனுமதிக்க முடியாது: பாகிஸ்தானுக்கு ஒபாமா கண்டிப்பு

புதுடெல்லி, 

நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

ஒபாமா நாளை வருகிறார்

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், மனைவி மிச்செல்லுடன் ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்து சேருகிறார்.

இதையொட்டி ஒபாமா பிரபல ஆங்கில பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார்.

பாகிஸ்தானுக்கு கண்டிப்பு

அதில், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டித்து இருக்கிறார்.

அவர் கூறி இருப்பதாவது:-

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது. இருந்தபோதிலும், பாகிஸ்தான், தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ அனுமதிக்க முடியாது என்பதை நான் அந்த நாட்டுக்கு தெளிவுபடுத்தி விட்டேன். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

தண்டிக்க வேண்டும்

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் சிலரும் பலி ஆனார்கள். பின்னர் மும்பையில் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் சிலரும் உயிர் இழந்தனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி, பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும்.

எனது கடந்த இந்திய பயணத்தின் போது நான் முதலில் மும்பை வந்தேன். அங்கு தாஜ் ஓட்டலில் உள்ள நினைவிடத்துக்கு சென்று, தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களையும் சந்தித்து பேசினேன். அப்போது, நமது நாடுகளின் பாதுகாப்புக்காக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று இந்திய மக்களிடம் தெரிவித்தேன். இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேச அளவில் முக்கிய பங்குதாரர்களாக விளங்குகின்றன.

இந்தியாவுக்கு உதவ தயார்

சில விஷயங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய போதிலும், பரஸ்பர நம்பிக்கை, மரியாதையின் அடிப்படையில் நாம் இணைந்து செயல்பட முடியும். தலைவர்கள் மட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்படும் முடிவுகளை நமது அரசாங்கங்கள் செயல்படுத்த வேண்டும்.

இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் வர்த்தகம், முதலீடு, உயர் தொழில்நுட்பம் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்கு இருந்து வரும் தடைகளை அகற்ற முடியும். இந்தியாவில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது.

தீவிரவாத எதிர்ப்பு போர் ஓயாது

தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் ஓயாது. இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒன்றுபட்டு நடத்துகிற போர் இது. அணுஆயுத பரவலை தடுக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஆப்கானிஸ்தானை மறுசீரமைக்க இந்தியா உதவி செய்வது பாராட்டுக்குரியது. அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக இந்தியா பல ஆண்டுகளாக உதவி வருகிறது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக் கூடத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பலி ஆனார்கள். இந்த தாக்குதல், தீவிரவாதிகள் நம் அனைவரையும் அச்சுறுத்துவதை நினைவூட்டும் வேதனையான நிகழ்வு ஆகும்.

இவ்வாறு ஒபாமா கூறி உள்ளார்.

கிடப்பில் போடப்பட்ட வழக்கு

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து நடத்திய கொலைவெறி தாக்குதல்களில் 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை நடத்திய 9 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட இளம் தீவிரவாதி அஜ்மல் கசாப் மீது மும்பையில் தனிக்கோர்ட்டு அமைத்து விசாரணை நடந்தது. பின்னர் அவர் தண்டிக்கப்பட்டு, தூக்கில் போடப்பட்டார்.

ஆனால் இந்த தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தீவிரவாதிகளான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் செயல்பாடுகள் பிரிவு தலைவர் ஜாகியுர் ரகுமான் லக்வி உள்ளிட்ட 7 பேர் மீது பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டாலும், 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive