Thursday 22 January 2015

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நியமனம் பெற்றதை எதிர்த்து வழக்கு: 65 அதிகாரிகளின் விடைத்தாள்களை யு.பி.எஸ்.சி. ஆய்வு செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி பணியில் உள்ள 65 அதிகாரிகளின் விடைத்தாள்களை மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி.) விரிவான ஆய்வு மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
தேர்ச்சி செல்லாது
2000–2001–ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் வெவ்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி நடராஜன் என்பவர் 2005–ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்ச்சி பெற்ற 83 பேரின் விடைத்தாள்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக நிபுணர் குழுவின் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும், உடனடியாக அவர்கள் வகித்து வரும் அரசு பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.
பதவியில் நீடிக்கலாம்
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை கடந்த ஆண்டு ஜூன் 30–ந் தேதி தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் மாற்றம் கோரி, பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை ஏற்று, கடந்த ஆகஸ்டு 27–ந் தேதியன்று, 83 அதிகாரிகளும் பதவியில் நீடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இவர்களில், ராஜினாமா செய்தவர்கள் போக தற்போது 65 பேர் பணியில் உள்ளனர்.
வக்கீல்கள் வாதம்
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை மீண்டும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்களில் ஒருவரான மாதவன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும், தமிழக அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கியும், டி.என்.பி.எஸ்.சி. சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியமும் வாதிட்டனர்.
யு.பி.எஸ்.சி.க்கு அனுப்ப உத்தரவு
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘டி.என்.பி.எஸ்.சி. இன்னும் இரு வார காலத்திற்குள் 65 அதிகாரிகளின் விடைத்தாள்களை யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பி வைக்கவேண்டும். யு.பி.எஸ்.சி. இந்த விடைத்தாள்களில் நியமனத் தேர்வுக்காக டி.என்.பி.எஸ்.சி. வரையறுத்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அந்த அறிக்கையை 2 மாதத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கின் விசாரணை மே 6–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive