Thursday 22 January 2015

கடந்த டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.4 சதவீதம் குறைந்தது

உள்நாட்டில், கடந்த டிசம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி 1.4 சதவீதம் குறைந்து 32.10 லட்சம் டன்னாக உள்ளது. கெய்ரன் இந்தியா போன்ற தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் வயல்களில் உற்பத்தி சரிந்ததே இதற்கு காரணம். 2013 டிசம்பரில் 32.50 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி.

பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. 19 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்துள்ளது. இது 0.7 சதவீத வளர்ச்சியாகும். ஆழ்கடல் பகுதிகளில் இந்நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்ததே இதற்கு காரணம்.

அதே சமயம் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் வயல்களில் உற்பத்தி 5.2 சதவீதம் குறைந்து 10.20 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. குறிப்பாக கெய்ரன் இந்தியா நிறுவனத்தின் ராஜஸ்தான் எண்ணெய் வயல்களில் உற்பத்தி 7.8 சதவீதம் சரிவடைந்து 7.65 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

இயற்கை எரிவாயு

டிசம்பர் மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தியும் 3.5 சதவீதம் சரிவடைந்து 289 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கே.ஜி. டீ6 மண்டலத்தில் உற்பத்தி தொடர் சரிவை சந்தித்துள்ளதே இதன் பின்னணியாகும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 189 கோடி கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்துள்ளது. 2013 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 5.1 சதவீதம் குறைவாகும். தனியார் நிறுவனங்களின் எரிவாயு உற்பத்தி 4.5 சதவீதம் சரிவடைந்து 64 கோடி கன மீட்டராக உள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு

நம் நாட்டில் இப்போது 22 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. டிசம்பர் மாதத்தில் இந்த நிலையங்கள் 1.97 கோடி டன் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்துள்ளன. 2013-ஆம் ஆண்டின் இதே மாதத்தை விட இது 6.1 சதவீதம் அதிகமாகும். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive