Saturday 24 January 2015

தேர்தல் விதிமீறல் புகார்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்

புதுடெல்லி, 

தேர்தல் விதிமீறல் புகாருக்குள்ளான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்தது. மேலும், வாக்காளர்களை பணம் வாங்க சொன்னதற்காக அவருக்கு மீண்டும் நோட்டீசு அனுப்பி உள்ளது.

பா.ஜனதா புகார்

டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த 14-ந்தேதி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த ஒரு பேட்டி தொடர்பாக, அவர் மீது மாநில பா.ஜனதா தலைவர் சதிஷ் உபாத்யாயா தேர்தல் கமிஷனில் ஒரு புகார் அளித்தார்.

அப்பேட்டியில், டெல்லியில் வகுப்பு கலவரங்களை பா.ஜனதா தூண்டி வருவதாகவும், டெல்லியில் தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கு பா.ஜனதா பொறுப்பு என்றும் கெஜ்ரிவால் கூறியதாக சதீஷ் உபாத்யாயா கூறி இருந்தார்.

அந்த புகாரின்பேரில், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் கமிஷன் அறிக்கை மற்றும் கெஜ்ரிவால் பேட்டி பதிவு செய்யப்பட்ட வீடியோ சி.டி.யை கேட்டு வாங்கியது. சி.டி.யில், ‘சமீபகாலத்தில் டெல்லியின் பலபகுதிகளில் வகுப்பு கலவரத்தை தூண்டி விட்டதற்கு பா.ஜனதாவே பொறுப்பு’ என்று கெஜ்ரிவால் பேசி இருந்தது தெரிய வந்தது.

நோட்டீசு

இதற்கு விளக்கம் கேட்டு, கடந்த 17-ந்தேதி, கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டதால், 23-ந்தேதி காலை 11 மணிவரை அவருக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதற்குள் கெஜ்ரிவால் தனது விளக்கத்தை அனுப்பி வைத்தார்.

பதற்றம்

அதை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அவருக்கு தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தங்கள் விளக்கத்தையும், தங்களது பேட்டி அடங்கிய வீடியோ சி.டி.யையும் கவனமாக ஆய்வு செய்தோம். தாங்கள் பேட்டியில் கூறியதை தாங்களே மறுக்கவில்லை.

எனவே, தங்களது கருத்து, வெவ்வேறு சமூகம் மற்றும் மதங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மேலும் அதிகப்படுத்தவும், பரஸ்பர வெறுப்புணர்வை உருவாக்கவும், பதற்றத்தை உண்டாக்கவும் கூடியது என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது.

கண்டனம்

மேலும், அமைதியான தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கக் கூடியது என்றும் கருதுகிறது. எனவே, தங்கள் கருத்து, தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.

ஆகவே, தேர்தல் கமிஷன் தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த தேர்தல் விதிமீறலுக்காக தங்களுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்காலத்தில், தாங்கள் பொது இடங்களில் தெரிவிக்கும் கருத்துகளில் எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

27-ந்தேதிவரை கெடு

மேலும், ‘பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதற்காக, அவருக்கு நேற்று மீண்டும் தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. அதில், 27-ந்தேதி காலை 11 மணிக்குள் விளக்கத்தை தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

அப்படி தெரிவிக்க தவறினால், மேற்கொண்டு அவருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும் என்றும் கூறியுள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive