Thursday 22 January 2015

இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் ஒபாமாவுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி,
இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
ஒபாமா வருகிறார்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிற 25–ந் தேதி முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 26–ந் தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் அவர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார்.
ஒபாமாவின் இந்திய பயணத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுவதால் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஒபாமா வருகையின்போது அளிக்கப்பட இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
7 அடுக்கு பாதுகாப்பு
ஒபாமா, டெல்லியில் தங்கி இருக்கும்போது அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ள பல்முனை முகமை கொண்ட கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்படும். இது இந்தியாவிற்கு மிக மிக முக்கியமான தலைவர்கள் வரும்போது வழங்கப்படும் உயரிய பாதுகாப்பு ஏற்பாடு ஆகும்.
குடியரசு தின அணிவகுப்பை ராஜபாதை பகுதியில் பார்வையிடும் ஒபாமாவுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அணிவகுப்பு நடைபெறும் பகுதி முழுவதும் அதிநவீன ரேடார் சாதனம் மூலம் ஆகாய மார்க்கமாக கண்காணிக்கப்படும்.
எல்லையில் வீரர்கள் குவிப்பு
இதேபோல் தரைப்பகுதி முதல் வான்வெளி பகுதி வரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தாஜ்மகாலை பார்வையிடுவதற்காக ஒபாமா ஆக்ரா செல்வது வரை இந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.
ஒபாமா வருகையின்போது அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தகுந்த இடங்களில் செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த பிரச்சினையும் கிடையாது.
தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் கூடுதலாக 1,200 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive