Thursday 22 January 2015

போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு

பேரையூர், 

போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

பெண் போலீஸ்காரர்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சலுப்பபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகள் கருப்பாயி (வயது 32). இவர் கடந்த 2005-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். தற்போது பேரையூர் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2007-ம் ஆண்டு கருப்பாயிக்கும், அவருடைய தாய் மாமாவான பெத்தண்ணசாமி (35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின் இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் ராணுவத்தில் பெத்தண்ணசாமி பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் ஒரு மாத விடுமுறையில் சலுப்பபட்டிக்கு பெத்தண்ணசாமி வந்தார். விடுமுறை முடிந்த பிறகும், மீண்டும் பணிக்கு திரும்பாமல் கடந்த 4 மாதங்களாக ஊரிலேயே இருந்து வந்துள்ளார். இதுபற்றி கேட்ட போது மது குடித்து விட்டு வந்து மனைவி கருப்பாயியுடன் அவர் தகராறு செய்து வந்தார்.

கணவருடன் பிரச்சினை

இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பணி நிமித்தமாக போலீஸ் நிலையத்துக்கு கருப்பாயி சென்றார். அங்கு இருந்த மற்ற போலீசார் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டனர்.

இதனால் கருப்பாயி மட்டும் போலீஸ் நிலையத்தில் தனியாக பணியில் இருந்தார். அப்போது மன உளைச்சலில் இருந்த கருப்பாயி திடீரென்று இரவு 12¾ மணியளவில் தன்னுடன் பணியாற்றும் போலீஸ்காரர் சத்தியமூர்த்தி என்பவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் மனஉளைச்சலாக இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று தெரிவித்த நிலையில் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியமூர்த்தி, போலீஸ் நிலையத்துக்கு செல்வதற்குள் அசம்பாவிதம் ஏற்பட்டு விடலாம் என்று கருதி அதை தவிர்க்கும் வகையில் உடனே அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக எழுத்தர் சுரேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்து அவரை உடனே போலீஸ் நிலையத்துக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுட்டார்

ஆனால் அதற்குள் கருப்பாயி அங்கிருந்த கைத்துப்பாக்கியில் 2 தோட்டாக்களை நிரப்பி தனது நெற்றிப் பொட்டில் வைத்து சுட்டுக் கொண்டார். அந்த குண்டு அவரது தலையை துளைத்துக் கொண்டு மறுபக்கம் வழியாக வெளியே வந்து சுவரில் பாய்ந்து கீழே விழுந்து கிடந்தது. கருப்பாயி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து வந்தனர். அங்கு உட்கார்ந்த நிலையில் தலையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்த கருப்பாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அவர் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை பார்த்த போது அதில் மீதம் ஒரு தோட்டா அப்படியே இருந்தது.

கணவர் போலீசில் சரண்

தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி, கூடுதல் கண்காணிப்பாளர் ஜான்ரோஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் ஆகியோர், நாகையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் தடயங்களை சேகரித்தனர்.

இதுபற்றி அறிந்த பெத்தண்ணசாமி மதுரையில் இருந்து புறப்பட்டு பஸ்சில் திருச்சி வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்து இறங்கியதும், கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் சென்று அங்கு சரண் அடைந்தார். அப்போது அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், “எனது மனைவி கருப்பாயி தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறுதிச் சடங்கில் நான் கலந்து கொள்ள வேண்டும். ஆகையால் எனக்கு பாதுகாப்பு அளித்து இறுதிசடங்கில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மதுரை பேரையூர் போலீசார் திருச்சிக்கு வந்து பெத்தண்ணசாமியை அழைத்துச் சென்றனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive