Thursday 22 January 2015

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதி காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி,
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது சட்ட ரீதியான நடவடிக்கையின் ஒரு பகுதிதான் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்து உள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது 10 ஆண்டு பதவி காலத்தில் கூடுதலாக நிலக்கரி இலாகாவையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் 2005–ம் ஆண்டு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையையும் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. மேலும், இந்த ஊழலில் மன்மோகன் சிங்குக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று சி.பி.ஐ. தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கோர்ட்டு ஏற்கவில்லை. நிலக்கரி இலாகாவுக்கு பொறுப்பானவர் என்ற முறையில் இது தொடர்பாக முன்னாள் பிரதமரிடமும் விசாரணை நடத்தவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
சி.பி.ஐ. விசாரணை
இதைத் தொடர்ந்து அண்மையில் மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து காங்கிரஸ் தரப்பில் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி மன்மோகன் சிங்கிடம், சி.பி.ஐ. விசாரணை நடத்தியது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சட்ட ரீதியான நடவடிக்கை
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கை முடித்து வைப்பது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இது கோர்ட்டு உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கையின் ஒரு பகுதிதான்.
சி.பி.ஐ. மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தியபோது அதற்கு நாட்டின் ஒரு பொறுப்பான பிரஜை என்கிற முறையில் அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஏனெனில் விசாரணையில் எந்த தாமதமோ, தடையோ இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் பிரதமர் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive