Thursday 22 January 2015

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயருமா? விலையை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி,
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய மந்திரிசபை அனுமதி அளித்துள்ளது. இதனால், சர்க்கரை விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
13 ஆண்டுகளாக ஒரே விலை
நாடு முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் 28 லட்சம் டன் சர்க்கரை வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில், சர்க்கரை விலை 40 ரூபாய்வரை உயர்ந்து விட்டது.
இருப்பினும், ரேஷன் கடைகளில், கடந்த 2002–ம் ஆண்டில் இருந்து கிலோ ரூ.13.50 என்ற விலையில் சர்க்கரை வினியோகிக்கப்பட்டு வருகிறது. 13 ஆண்டுகளாக, இந்த விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்க்கரைக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கிலோவுக்கு ரூ.18.50 மானியமாக வழங்கி வருகிறது.
கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சர்க்கரை மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அப்போது, ரேஷன் கடை தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் சர்க்கரை வாங்கிக் கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இத்தகைய சர்க்கரை கொள்முதலுக்கு கிலோவுக்கு ரூ.32 வரை மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
மாநிலங்கள் கோரிக்கை
இந்நிலையில், குஜராத், கேரளா போன்ற மாநில அரசுகள், மத்திய அரசிடம் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்த ஆண்டுக்கான சர்க்கரை கொள்முதலுக்கான மானியத்தை அதிகரிப்பதுடன், போக்குவரத்து செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது ரேஷன் கடைகளில் சர்க்கரை சில்லறை விற்பனை விலையை உயர்த்திக் கொள்ள தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.
மாநில அரசுகளுக்கு அதிகாரம்
இந்நிலையில், இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை மாற்றி நிர்ணயித்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விலை உயருமா?
இதன்படி, மாநில அரசுகள் ரேஷன் கடை சர்க்கரை விலையை, தங்கள் விருப்பம் போல், உயர்த்திக் கொள்ளவும் செய்யலாம், குறைத்துக் கொள்ளவும் செய்யலாம். இதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே சமயத்தில், சர்க்கரைக்கான மானியத்தை கிலோவுக்கு ரூ.18.50 என்ற வீதத்தில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து வழங்கும்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive