Saturday 24 January 2015

உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம்: மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது? நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகம்

டாவோஸ், 

‘மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்காது; உற்பத்தி துறைக்கு சலுகைகள் எதிர்பார்க்கலாம்’ என்பதை நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகமாக உணர்த்தி உள்ளார்.

முழுமையான முதல் பட்ஜெட்

மத்தியில் கடந்த மே மாதம் பதவி ஏற்றுள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதலாவது முழு அளவிலான பட்ஜெட், அடுத்த மாதம் 28-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது.

நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உற்பத்தி துறை ஊக்குவிப்பு

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் பேசினார். மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் பற்றி அவர் சூசகமாக சில அம்சங்களை தெரிவித்தார்.

அப்போது அவர், “உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும் என்பது எங்களது செயல்திட்டத்தில் முக்கியமான அம்சம். கடந்த பட்ஜெட்டின் போது மிகக்குறைந்த கால அவகாசம்தான் இருந்தது. இருப்பினும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை, தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலத்தை ஊக்குவிக்கும் அறிவிப்புகளை தந்தோம். இந்த துறைகள் முன்னேற்றம் காண வேண்டும் என்று கருதுகிறோம். எனவே எங்கள் செயல்திட்டத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்” என குறிப்பிட்டார்.

எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்

தொடர்ந்து அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்து வருகின்றன. வருவாயைப் பெருக்கும் அரசின் திறனும் மேம்படும். வரி வீதங்களை உயர்த்துவதற்கு நான் ஆதரவானவன் அல்ல. அது உற்பத்தி துறையில் எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என கூறினார்.

எனவே மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வுகள் பெரிதான அளவு இருக்காது, உற்பத்தி துறைக்கு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

நேற்று நடந்த உலக பொருளாதார மன்ற அமர்விலும் அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. நாங்கள் மீண்டும் உயர்ந்த வளர்ச்சி வீதத்தை எட்டிப்பிடிக்க வாய்ப்புகள் உண்மையிலேயே இருக்கின்றன” என கூறினார்.

வரிகள் பற்றி அவர் பேசுகையில், “அர்த்தமற்ற விதத்தில் வரி விதிப்புகளுடன் நான் வர மாட்டேன். அது எங்களுக்கு கெட்ட பெயரைத்தான் தரும். நான் கூற விரும்புகிற செய்தி, எங்கள் ஆட்சியில் வரி விதிப்பு ஸ்திரமாக இருக்கும் என்பதுதான்” என குறிப்பிட்டார்.

மானியங்கள்

மானியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “ஜனவரி 1-ந் தேதி முதல் நாங்கள் ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறோம் (கியாஸ் மானியத்தை நேரடியாக வழங்குதல்). அதில் மானியங்கள் தவறான வழியில் போவதை தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுமொத்த மானிய செயல்பாடுகளை மாற்றி சீர் செய்ய உள்ளோம். ஆனால் அது மிக நீண்ட பயணம்” என கூறினார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive