Thursday 22 January 2015

தங்கம் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்தது ஒரு பவுன் ரூ.21,424–க்கு விற்பனை

சென்னை, 
தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.312 உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.21,424–க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர் ஏற்றத்தில் தங்கம்
இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஜனவரி 1–ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,524–க்கும், பவுன் ரூ.20,192–க்கும் விற்பனையானது. அதன்பிறகு ஒருவாரம் தங்கம் விலையில் ஏற்றம் மட்டுமே இருந்துவந்தது.
கடந்த 7–ந்தேதி மட்டும் கிராமுக்கு ரூ.13–ம், பவுனுக்கு ரூ.104–ம் என தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு தொடர் ஏற்றநிலையில் இருந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த 19–ந்தேதி உச்சத்தை அடைந்தது. அதாவது அன்றைய தினம் கிராம் ரூ.2,632–க்கும், பவுன் ரூ.21,056–க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை ரூ.21 ஆயிரத்தை தொட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
ரூ.312 அதிரடி உயர்வு
இந்தநிலையில் நேற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 639–க்கும், பவுன் ரூ.21 ஆயிரத்து 112–க்கும் விற்பனையானது. இந்தநிலையில் நேற்று பவுனுக்கு ரூ.312 அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 678–க்கும், பவுன் ரூ.21 ஆயிரத்து 424–க்கும் விற்பனையானது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.42.20–க்கும், கிலோ ரூ.39,425–க்கும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.43.10–க்கும், கிலோவுக்கு ரூ.835 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.40,260–க்கும் விற்பனை செய்யப்பட்டது.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
இந்த அதிரடி விலை உயர்வு குறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–
உலகசந்தையில் கச்சா எண்ணை விலை தொடர் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு ஏற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. மேலும், தங்கத்தின் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் எதிரொலியாகவும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தமாதம் முழுவதும் தங்கம் விலை உயர்ந்துகொண்டே போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive