Wednesday 21 January 2015

வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் பட்டப்பகலில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகளை இடித்து அட்டகாசம் செய்தன.

காட்டு யானைகள்

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக (டேன்டீ) நிர்வாகத்திற்கு சொந்தமான சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு 5-ம் பாத்தி குடியிருப்புக்கு அருகில் உள்ள வனப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 2 குட்டியுடன் 15 யானைகள் வந்தன.

இந்த 15 யானைகளும் நேற்று காலை 11.30 மணிக்கு 5-ம்பாத்தி குடியிருப்புக்குள் நுழைந்தன. அப்போது எஸ்டேட் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றிருந்ததால், பெரும்பாலான வீடுகளில் யாரும் இல்லை. குடியிருப்புக்குள் காட்டுயானைகள் கூட்டமாக நுழைந்ததை பார்த்து வீட்டில் இருந்த வயதான வர்களும், சிறுவர்களும் அச்சம் அடைந்து கூச்சல் போட்டனர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சிங்கோனா சோதனை சாவடி யில் பணியில் இருந்த வனத் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டினார்கள். வனப்பகுதிக்குள் சென்ற காட்டுயானைகள் மாலை 3 மணிக்கு மீண்டும் குடியிருப்புக்குள் நுழைந்தன.

வீடுகளை இடித்தன

பின்னர் காட்டுயானைகள், அங்கிருந்த வீடுகளை இடித்து அட்டகாசம் செய்தன. சில யானைகள் இடிந்த சுவற்றின் மண்ணை சாப்பிட்டன. அந்த வீடுகளின் சுவர் சுண்ணாம்பு கலந்து கட்டப்பட்டது என்பதால் காட்டுயானைகள் மண்ணை சாப்பிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வீடுகள் இடிக்கப் பட்டதை அறிந்த குடியிருப்பு பகுதி மக்களும், வனத்துறையினரும் விரைந்து வந்து காட்டு யானைகளை துரத்தினார்கள். ஆனால் மாலை 4 மணிவரை அங்கேயே சுற்றித்திரிந்த யானைகள், பின்னர் அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றன. ஆனால் யானைகள் மீண்டும் இரவு நேரத்தில் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் இருந்தனர்.

இது குறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறியதாவது:-

பாதுகாப்பு இல்லை

5-ம் பாத்தி குடியிருப்பு பகுதியில் 40 வீடுகள் உள்ளன. ஆனால் 6 குடும்பங்கள் மட்டுமே வீடுகளில் குடியிருந்து வருகிறோம். மற்ற வீடுகள் காலியாக உள்ளன. வீடுகளில் தொழிலாளர்கள் இல்லாததால் யானைகள் அடிக்கடி வந்து சேதம் விளைவிக்கிறது.

எங்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்து தர வேண்டும் அல்லது குடியிருப்புகளை சுற்றி உள்ள புதர் செடிகளை அகற்றி மின்வேலி அமைத்து பாதுகாப்பு தர வேண்டும் என்று டேன்டீ நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பட்டப்பகலில் காட்டுயானைகள் வீடுகளுக்கு வந்துள்ளதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே டேன்டீ நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வால்பாறையில் பட்டப்பகலில் வீடுகளை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive