Saturday 24 January 2015

இந்தியாவில் பயன்படுத்துவதற்காக ஒபாமாவின் அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்தது

புதுடெல்லி, 

இந்திய சுற்றுப்பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்து சேர்ந்தது.

குடியரசு தினவிழா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக, அவரது அதிநவீன ‘பீஸ்ட்’ கார் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. குறிப்பாக குடியரசுத்தின விழாவுக்காக ராஜபாதையில் ஒபாமா வரும்போது, இந்த காரில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர், இந்திய ஜனாதிபதியுடன் இணைந்தே வர வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை ஒபாமா கடைப்பிடித்தால், இந்தியாவில் பீஸ்ட் காரை பயன்படுத்தாத முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

நகரும் கோட்டை

இதற்கிடையே ஒபாமாவின் ‘பீஸ்ட்’ காரில் அடங்கியுள்ள மலைக்க வைக்கும் வசதிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘நகரும் கோட்டை’ என வர்ணிக்கப்படும் இந்த கார், 8 டன் எடை கொண்டது.

இந்த கார் 8 அங்குல தடிமன் கொண்ட உடல் கவசத்தையும், 5 அங்குல தடிமன் கொண்ட குண்டு துளைக்காத கண்ணாடி ஜன்னல்களையும் கொண்டது. இவை, உள்ளே இருக்கும் ஜனாதிபதியை ரசாயன தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான தாக்குதல்களில் இருந்தும் காக்க வல்லது.

சிறப்பு நுரை

காரின் கதவுகள் அனைத்தும், போயிங்- 757 ரக விமானங்களின் கதவுகளை ஒத்திருக்கும். இந்த காரில் உருக்கினால் செய்யப்பட்ட விளிம்புகளுடன் கூடிய, ‘பஞ்சர்’ ஆகாத டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விளிம்புகள் பொருத்தப்பட்டிருப்பதால், கார் பஞ்சர் ஆனாலும், நிற்காமல் சென்று விட முடியும்.

காரின் எரிபொருள் டேங்க் கூட, சிறப்பு நுரையால் மூடப்பட்டிருக்கும். இதனால் எரிபொருள் டேங்க் வெடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

இந்த காருக்கு என தனிப்பட்ட மாடல் பெயர் இல்லை. இது பல்வேறு வகையான வாகனங்களின் கலவை என்றுகூட கூறலாம். காரணம், இந்த காரில் உள்ள கைப்பிடிகள், கண்ணாடிகள், கதவுகள், முகப்பு விளக்குகள், பக்க கண்ணாடிகள் என அனைத்தும் வெவ்வேறு மாடல்களை சார்ந்தவை ஆகும்.

பழுதடைந்துள்ளது

என்னதான் ‘நகரும் கோட்டை’ என இந்த கார் பெருமிதமாக கூறப்பட்டாலும், கடந்த காலங்களில் பலமுறை இந்த கார் காரணமின்றி பழுதடைந்து இகழ்ச்சிக்குள்ளாகி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஒபாமா இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட போது, அங்கும் இந்த சம்பவம் நடந்தது.

மேலும் இந்த காரை ‘எரிபொருள் விழுங்கி’ என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைக்கிறார்கள். ஏனெனில் இந்த கார் ஒரு லிட்டருக்கு 3.4 கி.மீ.தான் ‘மைலேஜ்’ கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive