Thursday 22 January 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் 2 நாளில் அறிவிப்பு விஜயகாந்த்தை சந்தித்த பின் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை, 
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2 நாளில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று விஜயகாந்த்தை சந்தித்த பின் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 13–ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19–ந்தேதி தொடங்கியது. அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
27–ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் முடிவடைகிறது. வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசிப்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன் ராஜூலு மற்றும் ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை 10.20 மணியளவில் வந்தனர்.
டாக்டர் ராமதாசை சந்திக்க முடிவு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 10.40 மணியளவில் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு விஜயகாந்துடன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் 11.15 மணியளவில் தே.மு.தி.க. அலுவலகத்தில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார். கூட்டணி கட்சிக்குள் இருக்கும் எந்த கட்சி வேட்பாளர் என்பதை கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எங்கள்(பா.ஜ.க.) கட்சியில் உள்ள தலைவர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து, 2 நாளில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்.
தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் போட்டியிடுவது இல்லை என்ற நிலைப்பாட்டை பா.ம.க. எடுத்து இருக்கிறது. பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசி அவரது ஆதரவை பெற முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க. வேட்பாளர்?
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என்று இதுவரை கூறி வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று நேற்று அறிவித்துள்ளார். எனவே ஸ்ரீரங்கத்தில் தே.மு.தி.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றே தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ‘ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக தே.மு.தி.க. தலைமை செயலாளர் பார்த்தசாரதி திருச்சி சென்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், தே.மு.தி.க. சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை விஜயகாந்த் நியமித்திருப்பதாகவும் தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடிகர் நெப்போலியனை(பா.ஜ.க.) வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சியிலும் பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive