Thursday 22 January 2015

மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சேதம் அடைந்த வீட்டிற்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை, 
மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் சேதமடைந்த வீட்டிற்கு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், எஸ்.எம்.டேனியல் (வயது 46) தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
இடிந்து விழுந்தது
மவுலிவாக்கம், ராஜராஜன் நகரில் கடந்த 2012–ம் ஆண்டு ஜூன் 14–ந் தேதி ரூ.40 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினேன். இதற்காக பல்லாவரம் ஆக்சிஸ் வங்கியில் ரூ.32 லட்சம் கடன் வாங்கி, கடந்த 2 ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.32 ஆயிரம் தவணை தொகையை சரியாக செலுத்தி வந்தேன்.
இந்த நிலையில், என் வீட்டுக்கு அருகே கட்டப்பட்ட 11 அடுக்கு மாடிக்கட்டிடம் கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 28–ந் தேதி இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் என் வீட்டின் மீது விழுந்ததால், என் வீடு முழுவதும் சேதமடைந்தது. இதையடுத்து என்னுடைய குடும்பத்தையும், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களையும் அரசு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.
எச்சரிக்கை பலகை
இதன்பின்னர் கட்டிட இடிபாடுகளை எல்லாம் அகற்றிய பின்னர், என் வீட்டை சரிசெய்து குடியிருக்க அனுமதிக்கவேண்டும் என்று மனு கொடுத்தேன். அதற்கு அனுமதி வழங்க மறுத்த அதிகாரிகள், என் வீட்டுக்கு முன்பு ‘எச்சரிக்கை–இது தடை செய்யப்பட்ட பகுதி. அத்துமீறி நுழைபவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்’ என்று பலகையை வைத்துவிட்டார்கள்.
தற்போது நான் பரங்கிமலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து நீதிபதி ரெகுபதி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி, நிவாரணம் கேட்டு மனு கொடுத்தேன். ஆனால், எனக்கு அவர் எந்த ஒரு நிவாரணத்தையும் வழங்கவில்லை.
அதிகாரிகளின் கடமை
இந்த 11 அடுக்குமாடி கட்டிடத்தை கட்டும்போது, அந்த கட்டுமான பணிகளை கண்காணிப்பது என்று தலைமை செயலாளர், சென்னை பெருநகர பெருவளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலாளர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆகியோரது கடமையாகும். அவர்கள் தங்களது கடமையை செய்யாததால், எந்த தவறும் செய்யாத நான், தற்போது பாதிக்கப்பட்டுள்ளேன்.
எனவே, எனக்கு தகுந்த இழப்பீடு தொகையை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை என்னிடம் வீட்டுக்கடன் தொகையை வசூலிக்க வங்கி நிர்வாகத்துக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
நோட்டீசு
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு 8 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive