Saturday 24 January 2015

சாந்தகுமார் குழுவின் பரிந்துரைகள் பொது விநியோக திட்டத்தை மூட வழிவகுக்கும்- கருணாநிதி எச்சரிக்கை

சென்னை, 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, நாட்டின், 67 சதவீத மக்களுக்கு, உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உணவு வழங்குவதற்குப்பதிலாக, 40 சதவீதம் பேருக்கு மட்டும் உணவுப் பாதுகாப்பு வழங்கி, மானிய அளவை வெகுவாகக் குறைத்து விடலாம் என்று சாந்தகுமார் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

உரம், பெட்ரோலியப் பொருள்கள் போன்றவற்றுக்கான மானியத்தைப் பெருமளவுக்குக் குறைத்திட முடிவு செய்திருப்பதைப்போல, உணவுக்கான மானியத்தையும் குறைத்திட மத்திய பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது. 

வரிசையாக இப்படிச் செய்வதால், விவசாயிகளும், ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தினரும் தான் பாதிப்புக்காளாவார்கள் என்பதை மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருவதாகத்தெரிகிறது. பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை, தன்னுடைய பொறுப்பில் இருந்து விலக்கி, எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றியுள்ள மத்திய அரசு, சமையல் எரிவாயு மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, மானியம் வழங்குவதில் மாற்றம் செய்து வருகிறது. 

உர மானியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவத் திட்டமிட்டுள்ளது. அந்த வழியிலேயே உணவு மானியத்தை குறைக்கவும், பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய உணவுத்துறை மந்திரி சாந்தகுமார் தலைமையில் குழு ஒன்றினை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மத்திய அரசு அமைத்திருந்தது. 

அந்தக் குழு தான் கடந்த 21-ம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடியிடம் தனது பரிந்துரைகளை அளித்திருக்கிறது. சாந்தகுமார் அளித்துள்ள பரிந்துரைகள்படி, தமிழக அரசு நியாய விலை அரிசிக்காக மட்டும் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகச் செலவழிக்க வேண்டும். இந்த நிலையில் பயனாளிகளின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க சாந்தகுமார் குழு பரிந்துரைத்திருப்பதால், தமிழகத்திற்கான அரிசி ஒதுக்கீடு 14.80 லட்சம் டன்னாகக் குறைந்து விடும். 

அதன் காரணமாக அரிசி மானியத்திற்காக தமிழக அரசு தற்போது செலவழிப்பதை விட மேலும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சாந்தகுமாரின் பரிந்துரைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பா.ம.க. போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த நிலைமையில் மத்திய பா.ஜ.க. அரசு, பொது விநியோகத் திட்டத்தையே ஒட்டுமொத்தமாக மூடுவதற்கு வழி வகுக்கும் சாந்தகுமாரின் பரிந்துரைகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, ஏழை எளிய நடுத்தரமக்களுக்குத் தொடர்ந்து உதவி அவர்களைப் பாதுகாத்திடும் வகையிலான உணவுப் பாதுகாப்புத் திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்த முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive