Thursday 22 January 2015

27–ந்தேதி டெல்லியில் இந்திய மக்களிடையே ஒபாமா நேரடியாக உரையாற்றுகிறார்

புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகிற 27–ந்தேதி டெல்லியில் இந்திய மக்களிடையே நேரடியாக உரையாற்றுகிறார்.
நேரடி உரை
3 நாள் பயணமாக வருகிற 25–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அன்றைய தினம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். மறுநாள் அவர் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
இதைத் தொடர்ந்து ஒபாமா டெல்லியில் உள்ள ‘சிரி’ கோட்டையில் இந்திய மக்களிடையே ‘இந்தியா மற்றும் அமெரிக்கா: எதிர்காலத்தை நாம் இணைந்து நிர்மாணிப்போம்’ என்ற தலைப்பில் நேரடியாக உரை ஆற்றுகிறார். பிறகு, மனைவி மிச்செலியுடன் ஆக்ரா சென்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்தவாறே நாடு திரும்புகிறார்.
எதிர்பார்ப்பு
ஒபாமாவின் இந்திய சுற்றுப் பயணம் குறித்த நிகழ்ச்சி நிரலை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. அது பற்றிய அறிவிப்பை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று(வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒபாமாவின் சுற்றுப் பயணத்தில் மிக முக்கிய அம்சமாக அவர் சிரி கோட்டையில் இந்திய மக்களிடையே நிகழ்த்த இருக்கும் நேரடி உரை பற்றிய எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ளது.
(சிரி கோட்டை கில்ஜி வம்சத்தினரால், அலாவுதீன் கில்ஜி மன்னர் காலத்தில் மங்கோலியர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க தெற்கு டெல்லியை அடுத்து கி.பி.1303–ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. தற்போது இந்த கோட்டை சிதைந்த நிலையில் காணப்படுகிறது.)
மோடியின் பாணியில்...
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக நியூயார்க் நகரில் உள்ள மடிசன் சதுக்கத்தில் உரையாற்றினார்.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மோடி நிகழ்த்திய உரை அந்நாட்டின் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பானது. அவருடைய இந்த உரை அமெரிக்காவை மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல லட்சத்துக்கும் மேற்பட்டோரை ஈர்ப்பதாகவும் அமைந்தது.
சிறப்பம்சம்
இதுபோன்றதொரு உரையை அனேகமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சிரி கோட்டையில் நிகழ்த்துவார் என்றும் இதன் மூலம் இருநாடுகள் பற்றிய உறவு குறித்து அவர் எடுத்து வைக்கும் முக்கிய விஷயங்கள் உரையின் சிறப்பம்சமாக திகழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது இந்திய பயணத்தின்போது, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை மற்றும் குடியரசு தின விழாவில் பங்கேற்பு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒபாமா, பொதுமக்களிடையே நேரடியாக உரையாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive