Monday 19 January 2015

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அமெரிக்கா தீவிரம்

வாஷிங்டன், 

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது.

தீவிரவாத எதிர்ப்பு 

பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஜனாதிபதி ஒபாமாவுடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது, தீவிரவாதத்தை ஒடுக்க இரு தரப்பும் இணைந்து செயல்படுவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

குறிப்பாக இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் அல்–கொய்தா, லஷ்கர்–இ–தொய்பா, ஜெய்ஷ்–இ–முகமது, மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் மற்றும் ஹக்கானிகளின் வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் ஒடுக்க இரு நாடுகளும் இணைந்து உழைப்பது என வலியுறுத்தப்பட்டது.

ஒபாமா வருகைக்கு முன்... 

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த மாதம் இந்தியா வருகிறார். அவரது வருகைக்கு முன்னதாக, வெள்ளை மாளிகை வாக்குறுதியை (தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை) நிறைவேற்ற அமெரிக்க அரசு முனைப்பாக உள்ளது.

இதன் எதிரொலியாக தாவூத் இப்ராகிமின் 2 முக்கிய உதவி நிறுவனங்களுக்கு அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது. இதில் தாவூத் இப்ராகிமின் சசோதரரான அனிஸ் இப்ராகிமின் பேப்பர் கம்பெனியும் அடங்கும்.

ஜான் கெர்ரி பேச்சுவார்த்தை 


மேலும் தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருப்பதால் அனிஸ் மற்றும் அஜிஸ் மூசா பிலாகியா (தாவூத்தின் மற்றொரு உதவியாளர்) ஆகிய 2 பேரையும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

அத்துடன் பாகிஸ்தானில் இருந்து தூண்டப்படும் தீவிரவாத செயல்களை ரத்து செய்யவும் அமெரிக்கா வலியுறுத்தியது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இதை வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் நடவடிக்கை 
இதைத்தொடர்ந்து ஜமாத்–உத்–தவா, ஹக்கானி குழு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. மேலும் மும்பை தாக்குதல் குற்றவாளி லக்விக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதும், அமெரிக்காவின் வற்புறுத்தலின் பேரில்தான் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைப்போல தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவதை அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. எனவே அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive