Monday 19 January 2015

ராஜபக்சே தோல்விக்கு இந்திய உளவு அமைப்பு அதிகாரி உதவினாரா? புகாரின் பேரில் அதிரடி இடமாற்றம் என தகவல்

கொழும்பு, 

ராஜபக்சே தோல்விக்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் அதிகாரி உதவியதாகவும், இது தொடர்பான புகாரின் பேரில் அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ராஜபக்சே தோல்வியில் ‘ரா’

இலங்கையில் கடந்த 8-ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில், 3-வது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர் அணி வேட்பாளர் சிறிசேனா அபார வெற்றி பெற்று, அதிபர் ஆனார்.

ராஜபக்சேயின் தோல்விக்கு இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ அதிகாரி பங்காற்றியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பின்னணி என்ன?

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை தகராறு உள்ள நிலையில், ராஜபக்சே அந்த நாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டதும், சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை இலங்கையில் நிறுத்தி வைக்க அனுமதி அளித்ததும், இந்தியாவை கவலை அடைய வைத்ததுடன் ராஜபக்சேவுக்கு எதிரான நிலையை எடுக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்த ‘ரா’ அமைப்பின் அதிகாரி, ராஜபக்சேயின் மந்திரிசபையிலிருந்து சிறிசேனாவை விலக முதலில் வலியுறுத்தியதுடன், அவரை ராஜபக்சேவுக்கு எதிராக பொது வேட்பாளராக நிறுத்த ஆதரவு திரட்ட உதவியதாகவும் கூறப்படுகிறது.

சந்திரிகாவுடன் தொடர்பு

மேலும், அவர் இலங்கையில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக விளங்கிய ரனில் விக்கிரம சிங்கேயை சந்தித்து, அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனவும், நிச்சயம் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புள்ள பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அது மட்டுமின்றி, ராஜபக்சேவுக்கு எதிராக உள்ள முன்னாள் அதிபர் சந்திரிகாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதிபர் தேர்தலில் சிறிசேனாவை பொது வேட்பாளராக களம் இறக்கியதில் சந்திரிகாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி இடமாற்றம்

இந்த காரணங்களால் ‘ரா’ அமைப்பின் அதிகாரியை இந்தியா திரும்பப்பெற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அதன் காரணமாக அந்த அதிகாரி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இட மாறுதல் என்பது வழக்கமான நடவடிக்கை என அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive