Wednesday 21 January 2015

மனுதாரர்களின் யோசனைகளைப் பெற்று கருப்பு பண பதுக்கல் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உத்தரவு

புதுடெல்லி,

கருப்பு பண பதுக்கல் பற்றிய விசாரணையை விரைவாக முடிக்குமாறு சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

பொதுநல வழக்கு
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுவர உத்தரவிடக்கோரி, மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய அரசு மெத்தனம்
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை மீண்டும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. மனுதாரரான மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி சார்பில் வக்கீல் அனில் திவான் ஆஜரானார்.

அப்போது, ‘மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாத காலத்துக்கு மேலாகியும் கருப்பு பணத்தை மீட்க எதுவும் செய்யவில்லை. கருப்பு பண மீட்புக்காக, நான் பிரதமருக்கு வரைவு மசோதா ஒன்றை அனுப்பி வைத்தேன். அதற்கு எந்த பதிலும் இல்லை. இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை சாக்காக வைத்து, கருப்பு பணம் பதுக்கியவர்களின் பெயரை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவின் அனுமதியை பெறாமல், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்று தெரிவித்தார்.

மீட்க விருப்பம்
மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், ‘வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வரி ஏய்ப்பு செய்தவர்கள் பெயரை மத்திய அரசு வெளியிட வேண்டும்’ என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘கருப்பு பணம் பதுக்கியவர்களின் பெயரைத் தெரிந்து கொள்வதை விட அவர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டு வருவதைத்தான் கோர்ட்டு விரும்புகிறது’ என்று கூறினார்.

மத்திய அரசு பதில்

மனுதாரர்களின் வாதங்களுக்கு பதிலளித்த மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 பேருக்கும் சிறப்பு புலனாய்வு குழு நோட்டீசு அனுப்பி விசாரணையை நடத்தி வருவதாக தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு அந்த விசாரணையை முடிப்பதற்கு மார்ச் 31-ந் தேதி வரை காலஅவகாசம் அளித்துள்ளதால், அதற்கு முன்பாகவே முடிவை எதிர்பார்ப்பது சரியல்ல என்று பதிலளித்தார்.

விரைவாக முடிக்க வேண்டும்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற தங்களது முந்தைய உத்தரவை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்கள்.

மேலும் இந்த வழக்கின் அனைத்து மனுதாரர்களும் தங்களது ஆலோசனைகளை 2 வாரத்துக்குள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் முன்வைக்க அனுமதி அளித்தனர். மனுதாரர்கள் அளிக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படுவது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive