Wednesday 21 January 2015

மனைவி சுனந்தா கொலை வழக்கு: சசி தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு ஓரிரு நாட்களில் விசாரிக்க அழைக்கப்படுவார் என தகவல்


 புதுடெல்லி,
மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். ஓரிரு நாட்களில் விசாரணைக்காக அவர் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.
சுனந்தா கொலை வழக்கு
முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17–ந்தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுனந்தா மரணம் தொடர்பாக அண்மையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட இறுதி மருத்துவ அறிக்கையில், சுனந்தாவின் உடலில் விஷம் கலந்து இருந்தால் அவருக்கு மரணம் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
4 மணி நேரம் விசாரணை
இதைத் தொடர்ந்து சுனந்தாவின் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் கடந்த 1–ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி போலீசின் சிறப்பு விசாரணை குழுவினர் சசி தரூரை வசந்த் விகார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
அப்போது 2 துணை போலீஸ் கமிஷனர் மற்றும் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை அவரிடம் எழுப்பினர்.
இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்சி நிருபர்களிடம் கூறியதாவது:–
போலீஸ் எழுப்பிய கேள்விகள்
சம்பவம் நடந்த 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 17–ந்தேதி நடந்த நிகழ்வுகள் குறித்து சசிதரூரிடம் விசாரிக்கப்பட்டது.
குறிப்பாக சுனந்தா இறந்த நேரத்தில் சசிதரூர் எங்கே இருந்தார்? சுனந்தாவின் கைகளில் இருந்த காய அடையாளங்கள் எப்படி ஏற்பட்டது? சசி தரூர் யாரையாவது சந்தேகிக்கிறாரா? சுனந்தாவுக்கு அல்பிராக்ஸ் மாத்திரைகளை கொடுத்தது யார்? ஐ.பி.எல். தொடர்பாக சுனந்தாவுக்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தார்களா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
போலீசாரின் விசாரணைக்கு சசிதரூர் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். கேள்விகள் கேட்டபோது அமைதியாக காணப்பட்டார். அவர் அளித்த பதில்களை சிறப்பு விசாரணை குழுவினர் ஆய்வு செய்வார்கள். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் அழைக்கப்படுவார்
அப்போது நிருபர்கள் சிறப்பு விசாரணை குழு, ஐ.பி.எல். போட்டி கோணத்தில் இந்த வழக்கை எதிர்நோக்குகிறதா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த பஸ்சி, இது தொடர்பாக கூறப்படும் விஷயங்கள் பொருத்தமானதாக இருந்தால் நிச்சயமாக அது பற்றியும் விசாரிக்கப்படும் என்றார்.
சசிதரூர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா? என்ற மற்றொரு கேள்விக்கு, முதலில் அவருடைய(சசி தரூர்) பதில்கள் ஆய்வு செய்யப்படும். அடுத்த ஓரிரு நாட்களில் அவர் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
திறந்த மனதுடன்...
மேலும் அவர் கூறுகையில், இந்த வழக்கு தொடர்புடைய பிரச்சினைகளை திறந்த மனதுடன் மேற்கொண்டு வருகிறோம். சுனந்தாவின் மரணத்துக்கு யாராவது குற்றப் பொறுப்பு கொண்டு உள்ளனரா? அப்படியென்றால் அவர்கள் யார்? என்பதுதான் வெளிப்படையாக உள்ள கேள்வி. இந்த வழக்கில் இதுவரை யாரையும் நாங்கள் சந்தேகிக்கவில்லை. முதலில் விசாரணை நடவடிக்கைகள் முடிவடையட்டும். விசாரணை எவ்வளவு நேரம் நடத்தப்பட்டது என்பது குறித்து கூறவிரும்பவில்லை. அவர் இரவு 7 மணிக்கு போலீஸ் நிலையம் வந்ததால் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தோம் என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive