Sunday 18 January 2015

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை டெல்லியில் நடந்த இலங்கை மந்திரி–சுஷ்மா சுவராஜ் சந்திப்பில் ஆலோசனை

புதுடெல்லி, 
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக, டெல்லியில் நேற்று இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவும், சுஷ்மா சுவராஜும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தியாவுடன் நல்லுறவு
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெரும் தோல்வியை சந்தித்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சிறிசேனா வெற்றி பெற்றார். அங்கு அவரது தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று உள்ளது.
அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். எனவே பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இந்தியாவுடனான உறவை பலப்படுத்துவதில், சிறிசேனா அரசு அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக அதிபர் சிறிசேனா விரைவில் இந்தியா வர இருக்கிறார்.
சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு
அதற்கு முன்னதாக, 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, அதிகாரிகள் குழுவினருடன் நேற்று முன்தினம் மாலை டெல்லி வந்தார்.
டெல்லியில் நேற்று அவர், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நடந்தது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துதல், மீனவர்கள் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை, பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தை முடிந்தபின் வெளியுறவுத்துறை செயலாளர் சையது அக்பருதீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மீனவர்கள் பிரச்சினை
இந்திய–இலங்கை வெளியுறவு மந்திரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பரஸ்பர நம்பிக்கையுடன் சுமுகமாகவும், பயன் அளிக்கும் வகையிலும் அமைந்து இருந்தது. அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
மீனவர்கள் பிரச்சினை பற்றியும், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இலங்கை வசம் உள்ள இந்திய மீனவர்களின் 87 படகுகளை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமரவீரா வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜிடம் தெரிவித்து உள்ளார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசவும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் தீர்மானிக்கப்படும்.
இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையை அணுகவேண்டும் என்று இரு நாடுகளும் கருதுகின்றன.
உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அகதிகளை திருப்பி அனுப்பும் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு உயர் அதிகாரிகளும் இம்மாத இறுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. (தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் இருப்பதாகவும், இவர்களில் சுமார் 68 ஆயிரம் பேர் அரசு முகாம்களில் தங்கி இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவிக்கிறது.)
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது. தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது குறித்தும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுவது தொடர்பாகவும் வருங்காலத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும். ஏனெனில் இலங்கையில் இப்போதுதான் புதிய அரசு பதவி ஏற்று இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் இந்த முதல் சந்திப்பிலேயே பேசுவது இயலாத காரியம்.
அழைப்பு
பேச்சுவார்த்தையின் போது, இலங்கைக்கு வருமாறு சமரவீரா விடுத்த அழைப்பை சுஷ்மா சுவராஜ் ஏற்றுக்கொண்டார். இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்து அதிபர் சிறிசேனா எழுதிய கடிதத்தையும் சமரவீரா கொண்டு வந்துள்ளார்.
சிறிசேனாவின் இந்திய வருகை குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இவ்வாறு சையது அக்பருதீன் தெரிவித்தார்.
பிரதமருடன் சந்திப்பு
மங்கள சமரவீரா இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்கிறார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive