Monday 19 January 2015

வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் 17 நாள் வீட்டுக் காவல் முடிவுக்கு வந்தது

வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் 17 நாள் வீட்டுக் காவல் முடிவுக்கு வந்ததுடாக்கா, ஜன.19- 

வங்காள தேசத்தில் கடந்த 1991–96, 2001–06 காலகட்டங்களில் பிரதமர் பதவி வகித்தவர், கலிதா ஜியா (வயது 69). கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலை கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி புறக்கணித்து. 

இதனால், அந்த தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி பெரும்பான்மை பெற்றது. ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார். 

தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஷேக் ஹசீனா பிரதமராகி விட்டதாக குற்றம்சாட்டி வரும் கலிதா ஜியா, கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்ற தினமான அதே ஜனவரி 5-ம் தேதியை இந்த ஆண்டு ‘ஜனநாயக படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். 

இதையொட்டி, கடந்த 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், டாக்கா நகரில் உள்ள வங்காளதேச தேசியவாத கட்சி அலுவலகத்தில் கடந்த 3-ம் தேதி இரவு தொண்டர்களுடன் கலிதா ஜியா ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு வந்த போலீசார் அவரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எனவே, அந்த அலுவலகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, கடந்த 17 நாட்களையும் அவர் தனது அலுவலகத்திலேயே கழிக்க நேர்ந்தது. 

அலுவலகத்தை சுற்றிலும் ஆயுதங்களுடன் ஏராளமான போலீசாரும், சில பெண் போலீசாரும் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். வங்காளதேச தேசியவாத கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணித்து வந்தனர். ஆயுதமேந்திய வீரர்களுக்கான வாகனங்கள், நீர் பீரங்கிகள், அதிரடிப்படை மற்றும் கலவரத் தடுப்பு வாகனம் போன்றவை அப்பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு போலீஸ் வாகனங்கள் அகன்று சென்றன. ஆயுதமேந்திய வீரர்களுக்கான வாகனங்கள், நீர் பீரங்கிகள், அதிரடிப்படை மற்றும் கலவரத்தடுப்பு வாகனம் போன்றவையும் விலக்கிக்கொள்ளப்பட்டன. 

வழக்கமாக அந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் காவல் பணிக்கு நிறுத்தப்படும் சில போலீசார் மட்டுமே அங்கு உள்ளனர். இதனையடுத்து, கலிதா ஜியாவின் 17 நாள் வீட்டுக்காவல் முடிவுக்கு வந்ததாக டாக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive