Monday 19 January 2015

ஒபாமா தாஜ் மஹாலுக்கு செல்லும் 27-ம்தேதி டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட திட்டம்?

ஒபாமா தாஜ் மஹாலுக்கு செல்லும் 27-ம்தேதி டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட திட்டம்?புதுடெல்லி, ஜன.19-

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க மனைவி மிச்சேல் ஒபாமாவுடன் செல்லும்போது டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம்தேதி இந்தியா வருகிறார்.

உலக தீவிரவாதிகளின் ‘டாப் ஹிட் லிஸ்ட்’ பட்டியலில் இருக்கும் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகளை பார்வையிடவும், உரிய ஆலோசனைகளை வழங்கவும் அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகனை சேர்ந்த உயரதிகாரிகளூம் டெல்லி வந்துள்ளனர்.

இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹாலை பார்வையிட ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் வரும் 27-ம்தேதி ஆக்ரா நகரத்துக்கு செல்ல உள்ளனர். டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்லும் பாதையை பார்வையிட்ட அமெரிக்க ரகசிய போலீசார், டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையில் வழி நெடுகிலும் உள்ள உணவகங்களை சுத்தப்படுத்தி, 27-ம்தேதி அன்று மூடி வைக்கும்படி இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்தப் பாதையை குறி வைத்து ஏதாவது விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அங்கிருந்து ஒபாமா மற்றும் அவருடன் வரும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மாற்று வழியில் தப்பிக்க அவசரப்பாதை அமைக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தினர்.

அது மட்டுமின்றி, ஒபாமாவின் உண்மையான பயணத்துக்கு ஒரு பாதையையும், முன்னெச்சரிக்கையாக வேறு பாதையையும் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாஜ் மஹாலை பார்வையிட செல்லும் ஒபாமாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக இன்று இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். டெல்லியில் இருந்து சுமார் 165 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாஜ் மஹாலுக்கு ஒபாமா விமானம் மூலம் செல்வார் என இன்று முடிவு செய்யப்பட்டது.

எனினும், இறுதி நேரத்தில் இந்த விமானப் பயணம் ரத்து செய்யப்படுமேயானால் சாலை மார்க்கமாக அவர் இடையூறின்றி செல்லும் வகையில் 27-ம்தேதி டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் மியான்மர் தலைநகர் நய் பி டாவில் நடைபெற்ற கிழக்காசிய உச்சி மாநாட்டுக்கு ஒபாமா வந்தபோது, ஆறு விமானங்கள் நிறைய பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள், பெட்ரோல் டேங்கர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 1600 பாதுகாப்பு படை வீரர்கள் உடன் வந்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive