Monday 19 January 2015

இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மீதான போலீஸ் விசாரணை தொடங்கியது

கொழும்பு, 

இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மீதான புகார் தொடர்பான போலீஸ் விசாரணை தொடங்கியது.

புதிய புகார்

இலங்கையில், ராஜபக்சே ஆட்சியை இழந்ததை தொடர்ந்து, அவர் மீதும், அவருடைய குடும்பத்தினர் மீதும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

ஊழல் தடுப்பு ஆணையத்தில், ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி ஏற்கனவே ஊழல் புகார் அளித்தது.

இந்நிலையில், ராஜபக்சே அரசில் மக்கள் தொடர்புத்துறை மந்திரியாக இருந்த மெர்வின் சில்வா, ராஜபக்சே சகோதரர்கள் மீது சி.ஐ.டி. போலீசில் புகார் கூறியுள்ளார்.

மரண குழுக்கள்

புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளராக இருந்தவருமான கோத்தபய ராஜபக்சே, பதவியில் இருந்த போது, குண்டர்களை கொண்ட மரண குழுக்களை நடத்தி வந்தார். அந்த குழுக்களை பயன்படுத்தி, கடந்த 2009-ம் ஆண்டு ‘சன்டே லீடர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்காவை கொலை செய்ய வைத்தார்.

ராஜபக்சேவின் மற்றொரு தம்பியும், மந்திரியாக இருந்தவருமான பசில் ராஜபக்சேவும் எண்ணற்ற திரைமறைவு வேலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன்

ராஜபக்சே ஆட்சி காலத்தில், ‘வெள்ளை வேன்’ கலாசாரம் கொடி கட்டி பறந்தது. அரசு ஆதரவு பெற்ற குண்டர்கள், வெள்ளை வேனில் வந்து, பத்திரிகையாளர்களை கடத்திச் சென்று கொலை செய்து வந்தனர். இதை ராஜபக்சே அரசு கண்டு கொள்ளவில்லை.

மேலும், ராஜபக்சேவின் மகன்கள், என் மகன் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்தனர். என் மகனை தாக்கியவர்கள் யார் என்று எனக்கு தெரியும்.

விசாரணை

புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, நல்லாட்சி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அவரது ஆட்சியில், மேற்கண்ட புகார்கள் மீது முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு மெர்வின் சில்வா தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இத்தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive