Sunday 18 January 2015

5 ரூபாய் சில்லறை தட்டுப்பாட்டைப் போக்க 25 ரூபாய் நோட்டு வெளிவருமா? வியாபாரி யோசனையை பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மோடி அனுப்பினார்

சண்டிகார், 
5 ரூபாய் சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 25 ரூபாய் நோட்டு வெளியிட வேண்டும் என்ற ஒரு வியாபாரியின் யோசனையை, ரிசர்வ் வங்கியின் பரிசீலனைக்கு பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமருக்கு யோசனை
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பின்னர் கடந்த விஜய தசமியின்போது, ‘மான் கி பாத்’ என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றத்தொடங்கினார். அப்போது அவர், நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து பொதுமக்களின் யோசனைகளை விருப்பமுடன் வரவேற்கிறார்.
இதைக் கேட்ட சண்டிகாரை சேர்ந்த ராம்தாஸ் சிங்கால் என்ற வியாபாரி, 5 ரூபாய் நோட்டு மற்றும் நாணயத்தின் தட்டுப்பாட்டினை போக்குகிற வகையில் 25 ரூபாய் நோட்டினை வெளியிடலாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு யோசனை தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
‘5 ரூபாய் தட்டுப்பாடு நீங்கும்’
இது குறித்து அவர் கூறியதாவது:–
சந்தையில் 10 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஏராளமாக உள்ளன. எனவே 10 ரூபாய், 20 ரூபாய் என கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் 5 ரூபாய்க்கு தட்டுப்பாடு உள்ளது. எனவே 25 ரூபாய் நோட்டு வெளியிடலாம் என பிரதமருக்கு யோசனை தெரிவித்துள்ளேன். 20 ரூபாய் நோட்டுக்கு பதிலாகக்கூட 25 ரூபாய் நோட்டை வெளியிடலாம். 5 ரூபாய் தர வேண்டிய ஒருவர் 25 ரூபாய் நோட்டை கொடுத்தால் எளிதாக மீதி 20 ரூபாயை இரண்டு 10 ரூபாய் நோட்டுகளாக கொடுத்து விடுவோம். அதே போன்று 15 ரூபாய் தருவதற்கு 25 ரூபாய் தந்தாலும் மீதி 10 ரூபாய் எளிதாக தந்து விட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த யோசனை குறித்து கடந்த 2 மாதங்களில் 10 முறை இவர் கடிதம் எழுதி உள்ளார்.
ரிசர்வ் வங்கி பரிசீலனைக்கு...
இந்த நிலையில் புத்தாண்டு நாளில் அகில இந்திய வானொலியிலிருந்து, ராம்தாஸ் சிங்காலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில், 25 ரூபாய் நோட்டு வெளியிட வேண்டும் என்ற இவரது யோசனையை பிரதமர் மோடி விரும்பி, இதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே 25 ரூபாய் நோட்டு வெளியிடும் யோசனையை ரிசர்வ் வங்கி பரிசீலித்து, ஏற்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அப்படி 25 ரூபாய் நோட்டினை வெளியிடுகிறபோது, 5 ரூபாய் சில்லறை தட்டுப்பாடு பெருமளவு நீங்கி விட வாய்ப்பு இருக்கிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive