Sunday 18 January 2015

நகரங்களின் தற்போதைய பெயர்கள் சூட்டப்படும் மெட்ராஸ், பம்பாய் ஐகோர்ட்டுகளின் பெயர்கள் விரைவில் மாற்றம் சட்ட அமைச்சகம் மசோதா தயாரிக்கிறது

புதுடெல்லி, 
மெட்ராஸ் மற்றும் பம்பாய் ஐகோர்ட்டுகளின் பெயர்கள் விரைவில் மாற்றப்பட்டு, அந்தந்த நகரங்களின் பெயரிலேயே அழைப்பதற்கான மசோதாவை சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது.
இந்திய ஐகோர்ட்டு சட்டம்
இங்கிலாந்து ராணி எலிசபெத் காலத்தில், இந்திய ஐகோர்ட்டு சட்டம் 1861–ன் கீழ் அப்போதைய கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் பம்பாய் நகரங்களில் ஐகோர்ட்டுகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த பகுதிகளில் அந்தந்த நகரங்களின் பெயர்களிலேயே ஐகோர்ட்டுகள் நிறுவப்பட்டன.
அந்தவகையில் மராட்டிய தலைநகர் பம்பாயில், ‘பம்பாய் ஐகோர்ட்டு’ 1862–ம் ஆண்டு ஆகஸ்டு 14–ந்தேதி திறக்கப்பட்டது. தற்போது இந்த ஐகோர்ட்டுக்கு நாக்பூர், அவுரங்காபாத், கோவா ஆகிய 3 கிளைகள் உள்ளன.
பெயர்கள் மாற்றம்
இதன் தொடர்ச்சியாக தமிழக தலைநகர் மெட்ராசில், மெட்ராஸ் ஐகோர்ட்டும் நிறுவப்பட்டது. இதன் ஒரே கிளையாக மதுரை ஐகோர்ட்டு கிளை இயங்கி வருகிறது.
மெட்ராஸ் ஐகோர்ட்டு தமிழில் சென்னை ஐகோர்ட்டு என்று அழைக்கப்பட்ட போதிலும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஐகோர்ட்டு என்ற பெயரே உள்ளது. முன்னதாக கல்கத்தாவில் 1862–ம் ஆண்டு ஜூலை 1–ந்தேதி ஐகோர்ட்டு தொடங்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 1995–ம் ஆண்டு மராட்டிய மாநில அரசு பம்பாய் நகரின் பெயரை ‘மும்பை’ என மாற்றியது. இதைப்போல தமிழகத்திலும் மெட்ராஸ் என்ற பெயர், ‘சென்னை’ என மாற்றப்பட்டது. ஆனால் இந்த மாநிலங்களில் பழைய பெயரிலேயே இயங்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்களில், இந்த ஐகோர்ட்டுகளும் அடக்கம்.
மசோதா தயாரிப்பு
எனவே இந்த ஐகோர்ட்டுகளின் பெயர்களையும், தற்போதைய நகர பெயரிலேயே மாற்ற வேண்டும் என அந்தந்த மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
அதன்படி இந்த ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மசோதா தயாரிப்பு நடவடிக்கைகளில் சட்ட அமைச்சகம் தற்போது ஈடுபட்டு உள்ளது.
விரைவில் மாற்றம்
மத்திய அரசின் இந்த முடிவால் மெட்ராஸ் ஐகோர்ட்டு, விரைவில் சென்னை ஐகோர்ட்டு என்ற பெயரை அடைகிறது.
இதற்கிடையே கல்கத்தா ஐகோர்ட்டையும், தற்போது உள்ளபடி ‘கொல்கத்தா ஐகோர்ட்டு’ என மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive