Tuesday 20 January 2015

மத்திய அரசு அறிவிப்பு: திரைப்பட தணிக்கை வாரிய புதிய தலைவர் பகலாஜ் நிஹலானி நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ஜீவிதா உள்பட 9 உறுப்பினர்களும் நியமனம்

புதுடெல்லி,
திரைப்பட தணிக்கை வாரியத்தின் புதிய தலைவராக பிரபல பட அதிபர் பகலாஜ் நிஹலானியை மத்திய அரசு நியமித்துள்ளது. நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ஜீவிதா உள்பட 9 புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜினாமா
திரைப்படங்களை தணிக்கை செய்தது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையால், திரைப்பட தணிக்கை வாரிய தலைவராக இருந்த லீலா சாம்சன், கடந்த வாரம் பதவி விலகினார். தணிக்கை விஷயத்தில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தலையிடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி மறுத்த போதிலும், லீலா சாம்சனை தொடர்ந்து, திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்கள் 9 பேர் கடந்த சனிக்கிழமை ராஜினாமா செய்தனர்.
புதிய தலைவர்
இந்நிலையில், திரைப்பட தணிக்கை வாரியத்தின் புதிய தலைவராக பிரபல இந்திப்பட அதிபர் பகலாஜ் நிஹலானியை நேற்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நியமித்தது. அவர் கவுரவ அடிப்படையில் அப்பதவியில் நியமிக்கப்படுகிறார்.
நேற்று முதல் மூன்று ஆண்டுகளுக்கோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ அவர் இப்பதவியை வகிப்பார்.
அவர், பிரபல இயக்குனர் கோவிந்த் நிஹலானியின் மூத்த சகோதரர் ஆவார். ஆங்கன், தலாஷ், ஷோலா அவுர் ஷப்னம் உள்ளிட்ட படங்களை பகலாஜ் நிஹலானி தயாரித்துள்ளார்.
எஸ்.வி.சேகர், ஜீவிதா
தணிக்கை வாரியத்தின் 9 உறுப்பினர்கள் பதவி விலகி விட்டதால், 9 புதிய உறுப்பினர்களையும் நேற்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நியமித்தது.
புதிய உறுப்பினர்களில் பிரபல தமிழ் நடிகர் எஸ்.வி.சேகரும், நடிகை ஜீவிதாவும் அடங்குவர். எஸ்.வி.சேகர், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மேடை நாடகங்களும் நடத்தி வருகிறார்.
நடிகை ஜீவிதா, உறவை காத்த கிளி, தர்ம பத்தினி, இதுதாண்டா போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார். இவர், நடிகர் டாக்டர் ராஜசேகரின் மனைவி ஆவார்.
3 ஆண்டுகள்
மேலும், கதாசிரியர் மிஹிர் புடா, பேராசிரியர் சையது அப்துல் பரி, ரமேஷ் பதாங்கே, நடிகர் ஜார்ஜ் பேகர், சந்திர பிரகாஷ் திவிவேதி, பா.ஜனதாவை சேர்ந்த வாணி திரிபாதி திக்கூ, அசோக் பண்டிட் ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று முதல் மூன்று ஆண்டுகளுக்கோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ இப்பதவியை வகிப்பார்கள் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive