Monday 19 January 2015

குமரன் பத்மநாதனை கைது செய்ய வலியுறுத்தி இலங்கை கோர்ட்டில் மனு தாக்கல்

கொழும்பு,

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் குமரன் பத்மநாதனை கைது செய்ய வலியுறுத்தி இலங்கை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதனை கைது செய்ய வலியுறுத்தி இலங்கையில், ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் விஜிதா ஹெராத் பேசுகையில், "குமரன் பத்மநாதனை அவருடைய நடவடிக்கைக்காக கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதிகமான கேள்விகளுக்கு அவர் பதில்களை கொண்டுள்ளார்," என்று கூறினார். குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலாளராக இருந்தவர். இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் குமரன் பத்மநாதன் தன்னை விடுதலைப் புலிகளின் தலைவர் என்று அறிவித்துக் கொண்டார். 

குமரன் பத்மநாதன் மீது ராஜபக்சே அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற ரீதியில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வலிமையாக இருந்த, கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றை குமரன் பத்மநாதன் நடத்தி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு மலேசியா உளவுத்துறை குமரன் பத்மநாதனை கைது செய்ய கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் இலங்கை திரும்பியதும் போலீஸ் பாதுகாப்புடன் சுதந்திரமாக திரிந்தார். தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பதிலாக ஒரு அரசியல்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு ராஜபக்சேவுக்கு  பத்மநாதன் தேவைப்பட்டார் என்று அரசியல் ஆர்வலர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் குமரன் பத்மநாதன், இன்டர்போல் கண்காணிப்பு பட்டியலில் இருந்தவர். 

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற மைதிரிபாலா சிறிசேனாவின், மூத்த உதவியாளரும், செய்தித்தொடர்பாளருமான ரஜிதா சேனரத்னா கூறுகையில், ‘‘நாங்கள் குமரன் பத்மநாதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம், குமரன் பத்மநாதன் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive