Tuesday 20 January 2015

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை; சுப்பிரமணியசாமி வழக்குடன் சேர்த்து விசாரிக்க உத்தரவு

புதுடெல்லி,

விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

அவதூறு வழக்கு
ஆவின் பால் கொள்முதல் நடவடிக்கையில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் 10-ந்தேதி அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், தமிழக அரசு குறித்து அவதூறான கருத்துகள் உள்ளதாக, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நாளை (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணையில் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று செசன்சு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

விஜய்காந்த் மனு

இதை எதிர்த்து, விஜயகாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தே.மு.தி.க. வக்கீல் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விஜயகாந்த் அறிக்கையில் பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா குறித்து தனிப்பட்ட முறையிலோ, அலுவலக செயல்பாடுகள் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இதுகுறித்து மக்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றுதான் கூறப்பட்டு உள்ளது.

ரத்து செய்ய வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டில் இதேபோன்று சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஜெயலலிதா தரப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. அவருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த எல்லா வழக்குகளுக்கும் இடைக்கால தடை பிறப்பித்து உள்ளது.

எனவே அவதூறு வழக்குகள் மீது சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில் கீழ்கோர்ட்டுகள் இதே போன்ற வழக்குகளில் விசாரணையை மேற்கொள்ள முடியாது. எனவே விஜயகாந்த்துக்கு எதிராக சென்னை செசன்சு கோர்ட்டு பிறப்பித்துள்ள சம்மனை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தில், தனது கட்சிக்காரர் அமைச்சர் குறித்தோ அல்லது அரசாங்க செயல்பாடுகள் குறித்தோ நேரடியாக எந்த விமர்சனமும் செய்யவில்லை என்றும், அவருடைய அறிக்கையில் எந்த அவதூறான கருத்தையும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘மனுதாரர் ஐகோர்ட்டை அணுகாமல் நேரடியாக எதற்கு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்?’’ என்று கேட்டனர். அதற்கு வக்கீல் ஜி.எஸ்.மணி, தமிழக அரசுக்கு எதிராக சுப்பிரமணியசாமி இதே கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கீழ்க்கோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே மனுவில் இந்திய தண்டனை சட்டத்தில் அவதூறு குறித்த பிரிவுகளை நீக்குவது குறித்த கோரிக்கையும் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார்.

இதேபோன்ற மற்றொரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் இருப்பதால், சுப்ரீம் கோர்ட்டு தவிர வேறு எந்த கீழ்க்கோர்ட்டும் விசாரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடைக்கால தடை
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சென்னை செசன்சு கோர்ட்டில் விஜயகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டனர்.

மேலும், சுப்பிரமணியசாமி ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரிக்க உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த இந்த இடைக்கால தடையினால், தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நாளை விஜயகாந்த் ஆஜராக தேவை இல்லை.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive