Wednesday 21 January 2015

இந்தியா–அமெரிக்கா இடையே தீவிரவாத தடுப்பு தகவல் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது

புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய வருகையின்போது, இந்தியா–அமெரிக்கா இடையே தீவிரவாத தடுப்பு தகவல் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது.
3 நாள் பயணம்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வருகிற 25–ந் தேதி முதல் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அவருடைய வருகையின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுவதாவது:–
முக்கிய ஒப்பந்தங்கள்
கடந்த 2, 3 மாதங்களாகவே 3 முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகள் தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஒபாமா வருகையின்போது இந்த 3 பிரச்சினைகளிலும் ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக தீவிரவாத பிரச்சினை இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. ஏற்கனவே இந்த விஷயத்தில் 2 நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட்டுத்தான் வருகின்றன.
தகவல் பகிர்வு
எனினும், தீவிரவாதத்தை தடுப்பு தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தகவல்களை பகிர்ந்துகொள்வதில் கூடுதலாக அமெரிக்கா ஒத்துழைத்து செயல்படுவதை எதிர்பார்க்கின்றன.
அப்போதுதான் தீவிரவாத்தை தடுக்க முடியும் என்று இந்த அமைப்புகள் கருதுகின்றன. எனவே இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
போலி கரன்சி
போலி இந்திய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக இத்தகைய இந்திய கரன்சிகள் பாகிஸ்தான் மூலமாகவும், வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மூலமாகவும் இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடப்படுகிறது.
இதை அமெரிக்க உதவியுடன் தடுக்க முடியும் என்று இந்தியா கருதுகிறது. எனவே இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.
இதேபோல் இந்தியாவும், அமெரிக்காவும் தொழில் ரீதியான உறவை மேம்படுத்தும் வகையில் விசாக்களை தடையின்றி வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயண திட்டத்தில் மாறுதல்
இதனிடையே வருகிற 27–ந் தேதி காலை இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு ஒபாமா நாடு திரும்புவதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
முந்தைய திட்டத்தின்படி 27–ந் தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியின் விசேஷ ஹெலிகாப்டர் மூலம் சென்றுவிட்டு மீண்டும் டெல்லி திரும்புவதாக இருந்தது.
தற்போது ஹெலிகாப்டர் மூலம் செல்வது ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்க ஜனாதிபதியின் ரகசிய விமானமான ‘ஏர்போர்ஸ் ஒன்’ மூலம் ஒபாமா 27–ந் தேதி ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிடுவார். பின்னர் அங்கிருந்தவாறே அவர் நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாரபூர்வ காரில் பயணம்
இதேபோல் இரு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையே 26–ந் தேதி அன்று டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை ஒபாமா பார்வையிடுவதில் மாறுதல் செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒன்றும் நேற்று கையெழுத்தானது.
அதன்படி ஒபாமா குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட அமெரிக்க ஜனாதிபதி தனது அதிகாரபூர்வ காரான ‘பீஸ்ட்’டில் வருவார்.
சம்பிரதாய முறைப்படி நமது ஜனாதிபதியின் காரில்தான் பிற நாடுகளின் ஜனாதிபதிகள் பயணித்து, குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவது வழக்கம். அந்த சம்பிரதாயத்தில் இருந்து மாறுபட்டு ஒபாமா தனியாக தனது காரில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive