Tuesday 20 January 2015

டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய்க்கு சீட் மறுப்பு: ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்

புதுடெல்லி,

டெல்லி பாரதீய ஜனதா தலைவர் சதீஷ் உபாத்யாய்க்கு கட்சி தலைமை தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது அங்கு வந்த உபாத்யாய் தன் பங்குக்கு ஆதரவாளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் ஏற்றுக்கொள்ள மறுத்த அவரது ஆதரவாளர்கள் கட்சிதலைமைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் மீரவுலி தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்க வேண்டும் என்று கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய டெல்லி பாஜக தலைவர் உபாத்யாய், ”டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட நான் விரும்புகிறேன். ஒட்டு மொத்த டெல்லியிலும் நான் எனது கவனத்தை செலுத்தவுள்ளேன். எனவேதான் நான்  குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடவில்லை. பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தொண்டர்கள் விருப்பம். 

இது ஒரு தற்காலிகமான பிரச்சினை. கிரண்பேடி தலைமையின் கீழ் கட்சி வெற்றி பெறவேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலை நாம்  வெளியேற்ற வேண்டும். நான் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்தான். கட்சியை வெற்றி பெற வைப்பதுதான் எனது பொறுப்பாக இருக்கும்.  இது எனது சொந்த முடிவுதான். கட்சியின் ஆட்சி மன்றக்குழு என்னிடம் போட்டியிடுவது பற்றி கேட்டது. நான் எனது முடிவை ஆட்சிமன்றக்குழுவில் தெரிவித்தேன்” என்று தெரிவித்தார். 

முன்னதாக தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக சதீஷ் உபாத்யாய் சூசகமாக தெரிவித்து இருந்த நிலையில் தற்போது மேற்கண்டவாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி பாஜகவின் துணைத்தலைவர்  சிக்கா ராஜ், ஆதரவாளர்களும், பாஜகவின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கட்சி தலைமையை வெளிப்படையாக விமர்சித்தனர். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive