Tuesday 20 January 2015

‘ஐ’ திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கக் கோரி சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம்

சென்னை

‘ஐ’ திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கக் கோரி சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதோடு, தணிக்கைத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

முற்றுகை போராட்டம்

‘ஐ’ திரைப்படத்தில், திருநங்கைகளை இழிவுபடுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்காட்சிகளை திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும், திருநங்கை திருநம்பியர் உரிமைக்குழுவை சேர்ந்த திருநங்கைகள் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள திரைப்பட தணிக்கைத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பானு என்ற பொறியாளர் மாணவி தலைமை தாங்கினார். சித்தா டாக்டர் செல்வி சந்தோஷ், நடிகை ரோஸ், பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘ஊரோரம் புளிய மரம்...’

முற்றுகை போராட்டத்தின் போது, திருநங்கை பானு நிருபர்களிடம் கூறியதாவது:-

‘ஐ’ திரைப்படத்தில், திருநங்கை காட்சியை அறிமுகப்படுத்தும் போது, ‘ஊரோரம் புளிய மரம்... உலுப்பி விட்டால் சல சலக்கும்...’ என்ற பாடல் வரிகளை பதிவு செய்துள்ளனர். இதனால், தற்போது வளர்ந்து வரும் எங்களை போன்ற திருநங்கைகள் சாலைகளில் செல்ல முடிவதில்லை. மீண்டும் எங்களை பார்த்து கேலி, கிண்டல் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது.

எனவே, திருநங்கைகளை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள அந்த காட்சிகளை நீக்கும் வரை ‘ஐ’ திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். டைரக்டர் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இனிமேல், இது போன்று திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தணிக்கை குழுவில் மனு

அதைத் தொடர்ந்து, திரைப்பட தணிக்கைத்துறை இயக்குநரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்துவிட்டு திரும்பிய திருநங்கை பானு மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘ஐ’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக திரைப்பட தணிக்கைத்துறை இயக்குனர் எங்களிடம் உறுதி அளித்திருக்கிறார். மேலும், இதுபோன்று திருநங்கைகளை வைத்து தயாரிக்கப்படும் படங்களை திருநங்கைகள் முன்பாக போட்டு காண்பிப்பதாகவும் கூறி உள்ளார்.

எனினும், இன்னும் இரு தினங்களுக்குள் டைரக்டர் சங்கர், நடிகர்கள் விக்ரம், சந்தானம் ஆகியோர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயர் நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ பதில் சொல்ல அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வள்ளுவர் கோட்டம் முன்பு போராட்டம்


இதற்கிடையே சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, திருநங்கைகள் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். நிறங்கள் என்ற அமைப்பு சார்பில் அங்கு வந்திருந்த சங்கரி நிருபர்களிடம் கூறியதாவது:-

‘ஐ’ படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்திடும் காட்சிகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அந்த காட்சியை படத்தில் இடம்பெற வைத்த டைரக்டர், நடிகர்கள் விக்ரம், சந்தானம் ஆகியோர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற காட்சிகளுக்கு தணிக்கை குழுவினர் அனுமதி வழங்கக்கூடாது.

22-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ‘ஐ’ படத்துக்கு எதிராக பெரிய அளவில் அமைதியான போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் அனைத்து திருநங்கைகள் அமைப்புகளும் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், வக்கீல்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். திருநங்கைகள் சம்பந்தப்பட்ட திரைப்பட காட்சிகளில் திருநங்கைகளையே நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆண்களை திருநங்கைகளாக வேடம் போட்டு நடிக்க வைக்கக்கூடாது என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனு கொடுத்தனர்

பின்னர் சங்கரி தலைமையில் திருநங்கைகள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வருகிற 22-ந் தேதி நடத்தப்போகும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive