Tuesday 20 January 2015

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்–மந்திரி வேட்பாளர் கிரண் பேடி ஆட்சி மன்ற குழு முடிவை அமித் ஷா அறிவித்தார்

புதுடெல்லி, 

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்–மந்திரி பதவி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவதாக அமித் ஷா அறிவித்தார்.

ஆட்சி மன்ற குழு 

டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7–ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதல்–மந்திரி வேட்பாளராக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களம் காண்கிறார்.

இந்நிலையில், இத்தேர்தலில் பா.ஜனதாவின் முதல்–மந்திரி பதவி வேட்பாளரை முடிவு செய்வதற்காக, பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில், முதல்–மந்திரி வேட்பாளர் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கிரண் பேடி 

ஆலோசனையின் இறுதியில், சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை முதல்–மந்திரி வேட்பாளராக அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இத்தகவலை கட்சி தலைவர் அமித் ஷா நிருபர்களிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–

முதல்–மந்திரி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அவர் தலைமையில் தேர்தலை சந்திப்போம். கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார். அது, பா.ஜனதாவின் பாரம்பரிய தொகுதி.

அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததால், கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 62 பேர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாரதீய ஜனதா வெளியிட்டுள்ளது.

"கிரண் பேடி தலைமையில் பாரதீய ஜனதா மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் என்று நான் உறுதி அளிக்கிறேன். வருகிற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவின் வெற்றியை கிரண் பேடியின் தலைமை வெற்றிபெற செய்யும் என்று நான் நம்புகிறேன்." என்றும் அமித் ஷா கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive