Sunday 18 January 2015

சோனியாவுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீசு ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஏன் பதில் அளிக்கவில்லை?’

புதுடெல்லி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஏன் பதில் அளிக்கவில்லை? என கேட்டு சோனியா காந்திக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.
சோனியா பதில் தரவில்லை
தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் ஆர்.கே. ஜெயின் என்பவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பி, பதில் தருமாறு கேட்டிருந்தார்.
ஆனால் அதற்கு சோனியா காந்தி உரிய பதிலை அளிக்கவில்லை.
இதையடுத்து அவர் மத்திய தகவல் ஆணையத்துக்கு புகார் செய்தார்.
ஐகோர்ட்டில் முறையீடு
ஆனால் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து அவர் டெல்லி ஐகோர்ட்டை நாடினார். தனது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டார்.
அவரது மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, ஜெயின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க 6 மாத காலம் அவகாசம் வழங்கி, மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
நோட்டீசு
இந்த நிலையில், ஆர்.கே. ஜெயின் புகார் தொடர்பாக சோனியா காந்தி பதில் அளிக்காதது குறித்து விளக்கம் கேட்டு, மத்திய தகவல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் ஜெயின் புகாரின், ஒவ்வொரு பத்திக்கும் விளக்கம் தந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். அதன் நகலை புகார் தாரருக்கும் (ஆர்.கே.ஜெயின்) அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தின் முழு அமர்வு கூடி விசாரணை நடத்தியது. அப்போது, காங்கிரசும், பிற தேசிய கட்சிகளான பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் ஆகியவையும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு பதில் அளிக்க உரிய அமைப்பை ஏற்படுத்தவில்லை என கருத்து தெரிவித்தனர்.
அமித் ஷாவுக்கும் நோட்டீசு
சுபாஷ் அகர்வால் என்ற மற்றொரு தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரின் புகாரின் பேரில், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் பிற தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கும் விளக்கம் கேட்டு மத்திய தகவல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் அளிக்காமல் மறுப்பது அல்லது பதில் அளிக்காமல் இருப்பது குற்றம் என்பதும், உரிய கால எல்லையை கடந்தும் பதில் அளிக்காத போது, ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive