Wednesday 21 January 2015

மேல் முறையீட்டு மனு மீது விசாரணை: ‘வருமான வரி செலுத்திய நகைகளையும் வழக்கில் சேர்த்து உள்ளனர்’; ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதம்

பெங்களூரு,

“வருமான வரி செலுத்திய நகைகளையும் சொத்துகுவிப்பு வழக்கில் சேர்த்து உள்ளனர்” என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் நேற்று வாதம் செய்தார்.

10-வது நாளாக விசாரணை
சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த 5-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று 10-வது நாளாக தனிநீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பவானிசிங்கும், ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல்கள் நாகேஸ்வரராவ் மற்றும் குமார் ஆஜரானார்கள்.

அப்போது மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் வாதிடுகையில், குற்றவாளிகள் அனுமதி இல்லாமலும், அவர்கள் சிறையில் இருக்கும்போதும், அவர்களுக்கு தெரியாமலேயே வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

இதுபற்றி அரசு தரப்பில் வக்கீல் பவானிசிங்கிடம் நீதிபதி கேட்டார். ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

இதனால் தி.மு.க. தரப்பு வக்கீல்கள் குமரேசன் மற்றும் சரவணன் குறுக்கிட்டு குற்றவாளி சார்பாக கோர்ட்டு அனுமதியுடன் பாஸ்கர் என்பவர் அழைத்து செல்லப்பட்டு தான் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். உடனே நீதிபதி, அதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கூறினார். இதையடுத்து, குறிப்பிட்ட சில ஆவணங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தனர்.

வருமான வரி செலுத்திய பிறகும்...
அதன்பிறகு, வக்கீல் நாகேஸ்வரராவ் வாதாடும்போது, “ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது வாங்கியது இல்லை. அவர் சினிமாவில் நடிக்கும் போதும், பரிசுகளாக கிடைத்ததும் ஆகும். அந்த நகைகளுக்கு உரிய வருமான வரி செலுத்தப்பட்டு உள்ளது. அதுபோல சசிகலாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்கு உரிய வருமான வரி செலுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் வருமான வரி செலுத்திய பிறகும் அந்த நகைகளையும் வழக்கில் சேர்த்து உள்ளனர்” என்றார்.

இவ்வாறு வாதம் நடைபெற்றது. இதையடுத்து, வழக்கு விசாரணையை மறுநாள் (அதாவது இன்றைக்கு) ஒத்தி வைத்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive